மக்களவை தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மூத்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முனைப்பு காட்டி வரும் பாஜக, கவனிக்கப்படாத அனுபவமிக்க எதிர்க்கட்சித் தலைவர்களை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேர விருப்பம் தெரிவிக்கும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சி பிரமுகர்களை மதிப்பீடு செய்து வரவேற்கும் பணியை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேசிய பொதுச் செயலாளர்கள் தற்போது மேற்கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
undefined
பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மூத்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் பேசி வருவதாக தெரிகிறது. இந்த விவாதம் வருகிற 14ஆம் தேதிக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 14ஆம் தேதிக்கு பிறகு, அவர்கள் பாஜகவில் சேர அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மூத்த தலைவர்கள் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் கட்சி தாவுவதற்கான ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் பொருட்டு, பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தேசிய பொதுச் செயலாளர்கள் இடையே சமீபத்தில் பல சந்திப்புகள் நடந்துள்ளன. மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவில் சேருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டத்தின் போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சித் தலைவர்களை கட்சியில் சேர்க்கும் பொறுப்பை மதிப்பீடு அவர்களை கட்சியில் சேர்க்கும் பொறுப்பை அளித்ததாகவும் பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
2024 மக்களவை தேர்தல் மற்றும் 2025இல் நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போது, இந்த குறிப்பிடத்தக்க பணிக்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்குழுவானது, தேர்தல் நம்பகத்தன்மை, தொகுதி மக்களிடையே செல்வாக்கு, தேர்தல் முடிவுகளில் கணிசமான செல்வாக்கு செலுத்தும் சாதிய பின்புலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்! கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கில் நடவடிக்கை!
அவர்கள் பாஜகவில் இணைந்தவுடன், மக்களவை அல்லது சட்டசபை தேர்தலில் அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு என்பது அந்தந்த பகுதிகளில் உள்ள வேட்பாளரின் செல்வாக்கின் அடிப்படையில் இருக்கும். பாஜகவில் இணையும் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களின் சொந்த தொகுதி அல்லாமல் வேறு தொகுதி அல்லது அவர்கள் முன்பு பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதப்பட்டால், அத்தொகுதிகளில் பாஜக அவர்களை களமிறக்க வாய்ப்புள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜகவுக்கு பலவீனமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ள 160 இடங்களில், எதிர்க்கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு மாறுபவர்களை வேட்பாளராக நிறுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது.
1984ஆம் ஆண்டி 400 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முந்தைய சாதனையை முறியடிக்க பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கிடையில், பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் வரும் வாரங்களில் பாஜகவில் சேருவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் அரசியல் பின்னணி மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவர்களது சாத்தியமான பங்களிப்புகளை பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
2024 தேர்தலுக்கான தொலைநோக்கு ஆவணத்தைத் தயாரிக்கும் பணியை, மேற்பார்வையிடும் பணியானது பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் ராதா மோகன் தாஸ் அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விளம்பரம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பு தேசிய பொதுச்செயலாளர் சுனில் பன்சாலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.