பாஜக 15 இடங்களை தாண்டி வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கடுமையாக தாக்கியுள்ளார்
மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளதாக ஏற்கனவே பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆனால், 55 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ராமன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், அது வெறும் வெற்றறிக்கை எனவும், முதலில் அவர்கள் 15 இடங்களை தாண்டி வெற்றி பெறுகிறார்களா என்று பார்ப்போம் எனவும் சாடினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ராமன் சிங்கின் புகழ் உச்சத்தில் இருந்தபோதே அவர்களா 53 இடங்களை தாண்ட முடியவில்லை. இப்போது, 55 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என எப்படி எதிர்பார்க்கிறார்கள்?” என கேள்வி எழுப்பினார். பாஜக தொண்டர்களின் மன உறுதிக்காக அவர் அப்படி பேசியிருப்பார்; முடிவுகள் வரும்போது, அவர்கள் 15 இடங்களை தாண்டுகிறார்களா இல்லையா என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.
டீப் ஃபேக் ஜனநாயகத்தின் புதிய அச்சுறுத்தல்: விரைவில் வருகிறது சட்டம் - மத்திய அமைச்சர்!
முன்னதாக, நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, மாநிலத்தில் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ராமன் சிங் நம்பிக்கை தெரிவித்திருந்தார். முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 20 இடங்களில் குறைந்தது 14 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக 15 இடங்களை தாண்டி வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கடுமையாக தாக்கியுள்ளார். அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அம்மாநில துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2003 முதல் 2018 வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சி செய்த பாஜக, முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியமைக்க பெரும் முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.