டீப் ஃபேக்குகள் ஜனநாயகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
டீப் ஃபேக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள், தகவல்கள் உருவாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கவலை தெரிவித்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த முக்கியக் கூட்டத்தில், டீப் பேக்குகளுக்கு எதிராக அரசாங்கம் விரைவில் ஒழுங்குமுறையை கொண்டுவருவது என்றும், ஒரு சில வாரங்களில் சட்ட வரைவை தயார் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடனான இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஷ்வினி வைஷ்ணவ், ஜனநாயகத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக டீப்ஃபேக்குகள் உருவாகியுள்ளன என்றார். மேலும், இதுபோன்ற உள்ளடக்கங்களுக்கு அதனை படைப்பவர்கள் மற்றும் அது பகிரப்படும் சமூக ஊடக தளங்களுமே பொறுப்பு என்ற அவர், போலிகளை உருவாக்கும் படைப்பாளிகள் மற்றும் அது பகிரப்படும் தளங்கள் ஆகிய இரண்டிற்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் அரசாங்கம் யோசித்து வருவதாக தெரிவித்தார்.
டீப் ஃபேக்குகளை எவ்வாறு கண்டறியலாம்; டீப்ஃபேக்குகளை இடுகையிடுவதில் இருந்து மக்களை எப்படித் தடுக்க முடியும்; அத்தகைய உள்ளடக்கம் வைரலாவதைத் தடுக்க முடியுமா; டீப்ஃபேக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஊடகங்கள், அதிகாரிகளை பயனர்கள் எச்சரிக்கும் பொருட்டு புகார் அளிப்பதை எவ்வாறு செயல்படுத்தலாம்; அரசு, தொழில்துறை மற்றும் ஊடகங்கள் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட நான்கு முக்கிய விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
டீப் ஃபேக் போன்ற போலிகளுகு எதிராக ஒழுங்குமுறை தேவை என்பது விவாதங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது என்ற அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், அடுத்த சில வாரங்களில் விதிமுறைகளை உருவாக்கி முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
டீப் ஃபேக்குகளை உருவாக்குபவர்கள் மற்றும் அவற்றை பதிவிடும் தளங்கள் ஆகிய இருவருக்குமே பொறுப்பு உண்டு என்று அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். புதிய விதிகள், புதிய சட்டம் அல்லது ஏற்கனவே உள்ள விதிகளில் திருத்தம் போன்ற வடிவங்களில் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.