
லாலுவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மகள் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில், அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் பிளாஸ்டெரிங் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்… அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!
லாலு யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரது பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லாலு பிரசாத்துக்கு சிறுநீரக நோய் இருப்பது தெரிந்ததே. இதன் காரணமாக, அவரின் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை கூட கொடுக்காமல் உள்ளனர். லாலு யாதவின் உடல்நிலையை பல மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது ஒவ்வொரு பாகத்தையும் நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது. லாலுவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினரும், தொண்டர்களும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா... இதுதான் காரணமா?
இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் லாலுவை கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை லாலுவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த நிலையில் லாலுவின் மகளான ரோகிணி ஆச்சார்யா, தனது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் படத்தைப் பகிர்ந்து, தனது தந்தைக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.