இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை துவங்க இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்திக்கின்றனர். இதை முன்னிட்டு இருநாடுகளின் மேஜர் ஜெனரல்கள் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் நடக்கும் ஜி 20 மாநாட்டிலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இருதரப்பிலும் சுமூகமான சூழல் ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தை ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதலே இந்திய தரப்பில் மேஜர் ஜெனரல் பிகே மிஸ்ரா, யூனிபார்ம் போர்ஸ் கமாண்டர் ஹரிஹரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருந்தனர்.
சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் தேப்சாங், தேம்சோக் ஆகிய பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இருதரப்புக்கும் இடையில் ''பஃப்ஃபர் சோன்'' எனப்படும் நிலப்பரப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கு, இரண்டு நாடுகளின் துருப்புகளும் அத்துமீறி நுழையக் கூடாது, ரோந்து செல்லக் கூடாது என்ற சட்ட வரைமுறை உள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் மீறி, சீன ராணுவப் படை இந்த இடத்தில் ரோந்து செல்வதாக காலம் காலமாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்த உயர்மட்ட கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாதம், 13, 14 ஆகிய தேதிகளில் நடந்து இருந்தது.
undefined
சந்திரனை நெருங்கிய சந்திரயான் 3.. நிலவின் புகைப்படங்களை அனுப்பிய LHDAC - முழு விவரம்!
லடாக் எல்லையில் தற்போது பதற்றம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இருதரப்பிலும் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை துவங்கி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவின் தலைநகரான ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை மூன்று நாட்களுக்கு இந்த பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரில் ஆஜராக மாட்டார். புடின் காணொளி வாயிலாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள அவர் சார்பில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.