
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தனி சமையல் அறை அமைக்கப்பட்டு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அந்த சமையல் கூடத்தை இடித்து ஆதாரங்கள் அளிக்கப்பட்டுவிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சசிகலாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதற்கு தனியாக ஒரு சமையல் கூடத்தையே சிறைக்குள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்த சலுகைகளைப் பெற சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பினர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு 4 பக்க கடிதம் அனுப்பினார். இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து நாள்தோறும் அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன,
இதனிடையே 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக வினய்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரித்து ஒரு வாரத்தில் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.