ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கிரண் குமார் ரெட்டி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
ஆந்திராவின் பிரபல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கிரண் குமார் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் முதல்வராக ஆந்திராவை ஆட்சி செய்து வந்தவர். ஆந்திராவை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்கினார். ஆனால், இதையடுத்து வந்த தேர்தல்களில் அவரால் பெரிய அளவில் வெற்றி வாய்ப்புக்களை பெற முடியவில்லை. இதையடுத்து, தாயக கட்சியான காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். ஆனாலும், பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில் இவர் பாஜக கட்சியில் இணைவதாக கடந்த மாதங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து நேற்று டெல்லி சென்று இருந்தார் கிரண் குமார் ரெட்டி. அங்கு பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி முன்பு பாஜக கட்சியில் இணைந்தார்.
தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
பாஜகவில் இணைந்த பின்னர் பேட்டியளித்த கிரண் குமார், ''பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரின் இணைப்பு நாட்டுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால் பாஜகவில் சேர்ந்தேன். மாநிலத் தலைவர்களை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்வதில்லை. காங்கிரஸ் தலைமையின் தவறான நடவடிக்கையால் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள காங்கிரஸ் விரும்புவதில்லை'' என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து அளித்த பேட்டியில், ''என்னுடைய ராஜா புத்திசாலி. அவர் சொந்தமாக சிந்திப்பதில்லை. யாருடைய ஆலோசனையையும் எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.
இன்னும் இவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. தமிழ்நாடு, செகந்திராபாத், கர்நாடகா என பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதால், இவர்களது சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.