
தமிழகமே மழை, வெள்ளம், மின் தடை, போக்குவரத்து நெரிசல் என்று அல்லாடி அரசியல் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தேசிய அரசியலில் சாப்பாட்டு அரசியலை சுடச் சுட மேய்ந்து கொண்டிருந்தனர்.
தேசிய உணவு - என ஒரு வார்த்தை அடிபட்டதும், பலரும் கொதித்தெழுந்துதான் போனார்கள். எங்கள் இட்லிக்கும் சாம்பாருக்கும் அப்படி என்ன இளக்காரம் என்று தமிழக உணவுக்கு கைகொடுத்து களமாடினர் கர்நாடக அரசியல்வாதிகள். இலை இட்லி என்று ஒருவர், சட்னிதான் பெஸ்ட் என்று ஒருவர், இட்லிக்கு ஊத்தும் சாம்பாரைப் போல் ஒரு உணவு வருமா என்று சிலர்... இப்படி வலைத்தளமெங்கும் கிண்டிக் கிளறப்பட்ட கிச்சடியை ‘தேசிய உணவு' ஆக அறிவிக்கப் போவதாக ஒரு சர்ச்சையை சுடச்சுட இறக்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஒருவர்.
அவ்வளவுதான்... எல்லாம் பிடித்துக் கொண்டது. மாநிலத்துக்கு மாநிலம் ஒவ்வொருவரும் சுவாரஸ்யமாக சுவை கூட்டும் அவரவர் உணவுப் பொருளை கடை பரப்பினர். அதெப்படி..? கிச்சடி இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கப்படும்...? வியாழக் கிழமை நேற்று வலைத்தளமெங்கும் பரப்பி விடப்பட்ட சர்ச்சை இதுதான். சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய இந்த சர்ச்சைக்கு, பலர், கிச்சடி என்ற வார்த்தையை ஹெஷ்டாக் செய்து, டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் ட்ரெண்ட் ஆக்கி விட்டனர்.
அதெல்லாம் இல்லை, பரோட்டா, பிரியாணி எல்லாம் எங்கே போனது என்று சிலர் அதற்கு மல்லுக் கட்டினர். அடேய்... பூவ பூ..ன்னும் சொல்லலாம்... புஷ்பம்னும் சொல்லலாம்.. நீ சொல்லுற மாதிரி புய்ப்பம்னும் சொல்லலாம்... என்ற கவுண்டமணி செந்தில் காமெடிதான் பலமாக ஓடியது. யக்கோவ் அதுக்கு பேரு உங்க ஊருல கிச்சடி... அத எங்க ஊர்ல... உவ்வே.... உப்புமான்னு சொல்லுவோம் தெர்துல்ல... என்றார்கள். அட ஆமாம்..! ‘உப்புமாதான் தேசிய உணவு’ என்று பலர் காமெடி வலை விரித்தனர். உப்புமாவத்தான் நாங்க கவர்னருன்னு சொல்லுவோம் தெரியும்ல என்று சிலர் அதற்கு தூபம் போட்டனர்.
இப்படியாக இணைய விளையாடல் டிவிட்டரில் வலம் வந்து கொண்டிருக்க, தமிழக மக்களின் கவனமோ வெள்ளத்திலேயே நின்று போனது. இந்நிலையில், கிச்சடியை தேசிய உணவாக ஒன்றும் அறிவிக்கவில்லை, உண்மையில் அப்படி எல்லாம் தேசிய உணவு என்ற ஒரு வார்த்தையே கிடையாது. அது தவறு என்று மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஸிம்ரத் கௌர் பாதல் விளக்கமளிக்கும் அளவுக்கு விளையாட்டு வெகு சுவாரஸ்யமாகித்தான் போனது.
பின்னர், கௌர் பாதலே இது பற்றிக் குறிப்பிட்ட போது, கிச்சடியை தேசிய உணவாக யாரும் அறிவிக்கவில்லை. உண்மையில் தேசிய உணவு என்பது இங்கு இல்லை. அதை தேசிய உணவாக அறிவிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் தற்போது இல்லை. இந்தியாவில் சர்வதேச உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. அதில் இந்தியா சார்பில் கிச்சடி சமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வளவுதான். இதைப் போய், கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்பட உள்ளது என்பது போன்ற வதந்தியை யாரோ கிண்டிக் கிளறி விட்டுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
ஆனாலும், தேசிய உணவு சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.