
மத்திய பிரதேசத்தில் வன்முறை வெடித்த கார்கோன் பகுதியில் மசூதிகளில் சிசிடிவி பொருத்தும் முடிவினை அம்மாநில உள்துறை அமைச்சர் வரவேற்றுள்ளார்.மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. எஸ்.ஐ. சிதார்த் சவுத்ரி உள்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராம நவமி தினத்தன்று கலவரங்கள் அரங்கேறின.
மேலும் ராம நவமி தினத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கில் இசையை குறைக்க ஒரு தரப்பினர் தெரிவித்தது தொடர்பாக எழுந்த தகராறில் வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஊர்வலத்தின் மீது கற்கள் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்த வன்முறையில்,காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
கல்வீச்சு சம்பவங்களை தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் இர தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் ஊர்வலம் பாதியிலே நிறுத்தப்பட்டது. பின்னர் அப்பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளை மாநில அரசு இடித்தது.
இந்நிலையில் முஸ்லிம் தலைவர்கள் போபால் ஷேர் குவாசி, சையத் முஸ்தக் அலி தலைமையில் குழுவினர், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். ராம நவமி ஊர்வலங்களில் பங்கேற்றவர்கள் மசூதிகளில் காவிக்கொடிகளை ஏற்றியதாகவும், ஆட்சேபகரமான முழக்கங்களை எழுப்பியதாகவும், இது வன்முறைக்கு வழிவகுத்தது என்று அவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
மேலும் மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு உள்துறை அமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த, மேற்கொண்டுள்ள முயற்சி நல்லது. இந்த நடவடிக்கை குழப்பத்தை அகற்றி, பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தினால் அது வரவேற்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.