
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை ‘மாத்தி யோசிச்ச’ கேரள மதுக்கடை ஒன்று, 500 மீட்டருக்கு சுற்றுப்பாதை அமைத்து தப்பித்துள்ளது.
இதனால், தேசிய, மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடை இருந்தபோதிலும் வளைவுகளான பாதை அமைப்புகளால் கடையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
உத்தரவு
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டுவரும் மதுக்கடைகளை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகற்றி 500 மீட்டருக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மக்கள் தொகை குறைவாக நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் கிராமங்களில் 220 மீட்டருக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும்’’ எனத் தெரிவித்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கும் பரவூரில் செயல்பட்டுவரும் ‘ஐஸ்வர்யா ரெஸ்டோபார்’ தனது புது விதமான ‘ஐடியா’ மூலம் , கடையையும் மாற்றாமல், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறாமல் நடந்து கொண்டுள்ளது.
இந்த ஐஸ்வர்யா ரெஸ்டோ பாரின் வாயில் பாதை தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்ததால், கடையை அகற்ற வேண்டிய சூழல் இருந்தது. உடனடியாக இந்த கடையின் உரிமையாளர்கள் கடைக்கு வரும் வாயில் பகுதியை அடைத்துவிட்டார்.
அதற்கு பதிலாக ‘குழந்தைகள் புதிர் போட்டியில் விளையாடும் குழப்பாமான பாதை அமைப்பு’ போல் அமைத்துவிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்றார் போல், 500 மீட்டர் அளவுக்கு பாதையை 5 சுற்றுகளாக மாற்றிவிட்டார்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நேராக கடைக்குள் நுழைந்துவிடாமல், கடையை 5 சுற்றுகள் வரை சுற்றிச் செல்ல வேண்டும். இந்த சுற்றும் அளவு என்பது 500 மீட்டர் கணக்கிட்டு கட்டப்பட்டுள்ளது. ஆதலால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் கடை இருக்குமாறு மாற்றப்பட்டது.
இது குறித்து ஐஸ்வர்யா ரெஸ்டோ பாரின் மேலாளர் கூறுகையில், “ உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 500 மீட்டர் நடந்து மதுக்கடைக்கு வர வேண்டும். அதைத்தான் செய்து இருக்கிறோம். கடைக்குள் வர வேண்டுமென்றால், 500 மீட்டர் சுற்றி வரவேண்டும். இதற்கு ரூ.2லட்சம் செலவானது’’ என்றார்.
ஐஸ்வர்யா ரெஸ்டோபார் மட்டுமல்ல, அந்த நகரில் உள்ள பிரபலமான சைபர் ஹப், ஆம்பியன்ஸ் மால், லீலா ஆம்பியன்ஸ் ஆகியவை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் பாதையை மாற்றி, 4 தெருக்கள் சுற்றி தங்கள் கடைக்குள் வருமாறு பாதையை ஓட்டலின் பின்பக்கமாக வருமாறு மாற்றிவிட்டன.