
என் தலைமையிலான அரசு ஒரு போதும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்காது, அநீதி இழைக்கவும் அனுமதிக்கமாட்டேன். வரும் 23-ந் தேதிக்குள் விவசாயிகளின் கரும்பு நிலுவையை (கரும்பு ஆலைகள்) சர்க்கரை தயாரிப்பு நிறுவனங்கள் வழங்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு மாவட்டங்களில் விரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடமும், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள விவசாயிகளிடமும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
அநீதி இழைக்கமாட்டோம்
என்னுடைய ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படாது. அவர்களின் நலன்களை உதாசீனம் செய்து விட்டு, நடவடிக்கை ஏதும் எடுக்கமாட்டோம். அதே சமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை அவர்கள் வழங்க வேண்டும்.
இழப்பீடு
தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை அமைப்பதற்கு உரிய நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பெற நினைக்கும் போது, அதற்குரிய உரிய இழப்பீட்டுத் தொகையை அளிக்க வேண்டும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி இழப்பீடும், மற்ற வேலைவாய்ப்புகளும் வழங்க வேண்டும்.
வாய்ப்புகள்
அந்த பகுதி மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும், எதிர்கால சந்ததியினருக்கு பயணளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த சாலைத் திட்டங்கள் முடிந்த அந்தப் பகுதி மக்கள் வரிசெலுத்தாமல் அந்த சாலையை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்.
சி.பி.ஐ.விசாரணை
கடந்த 2010-11ம் ஆண்டு மாயாவதி ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் 10 சர்க்கரை ஆலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் ஏறக்குறைய ரூ.1100 கோடி ஊழல் நடந்திருப்பதாக அறிகிறோம். ஆதலால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை செய்ய ஆலோசித்து வருகிறோம்.
கெடு
விவசாயிகளுக்கு கரும்பு நிலுவையாக ரூ. 3 ஆயிரம் கோடி சர்க்கரை நிறுவனங்கள் தர வேண்டியுள்ளது. விவசாயிகள் கண்ணீர் சிந்த நான் அனுமதிக்க மாட்டேன். இந்த தொகையை வரும் 23ந் தேதிக்குள் விவசாயிகளுக்கு நிறுவனங்கள் தர வேண்டும். இல்லாவிட்டால், சர்க்கரை தயாரிப்பு நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.