
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையாவின் கோவா கிங்பிஷர் பங்களா வீடு 73 கோடி ரூபாய்க்கு இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இதனை நடிகரும், பெரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி ஏலத்தில் எடுத்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் கடன் ஏய்ப்பு செய்த கிங் ஃபிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் அவரது ’கிங் ஃபிஷர்' நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை ஏலத்தில் விற்று, அதன் மூலம் கடன் தொகையை ஈடு கட்ட வங்கிகள் முடிவு செய்தன.
அதன்படி, மும்பையில் உள்ள ’கிங் ஃபிஷர்' இல்லம், கோவாவில் உள்ள சொகுசு பங்களா ஆகியவற்றை ஏலத்துக்கு விட வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் 17,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மும்பை இல்லத்தின் அடிப்படை விலை 150 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகைக்கு ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால் மூன்று முறை ஏல முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதேபோன்று கோவாவில் உள்ள பங்களாவும் இருமுறை ஏலத்துக்கு வந்தது. அதனையும் ஏலம் கோர எவரும் முன்வரவில்லை.
இந்நிலையில், அந்த இரு சொத்துகளின் அடிப்படை விலை மேலும் 10 சதவீதம் குறைக்கப்பட்டு ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
மும்பை இல்லத்துக்கு 103.5 கோடி ரூபாயும் , கோவா பங்களாவுக்கு 73 கோடி ரூபாயும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இன்று ஏலம் விடப்பட்டது.
இறுதியாக கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லா விற்பனை செய்யப்பட்டதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
நடிகரும் இளம் தொழிலதிபர் ஜே.எம்.ஜே. குழும தலைவருமான சச்சின் ஜோஷி கோவா கிங்பிஷர் பங்களா வீட்டை வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.