
அரியானா மாநிலம் அனுராக் ஷாபூரை சேர்ந்தவர் சத்பிர் சிங். அவரது சகோதரர்கள் ராம்தியாள், கிருஷ்ணன் குமார். இவர்கள் 3 பேருக்கும் பூர்வீக சொத்து உள்ளது.
இந்த சொத்தை பங்கு பிரிப்பதில், 3 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து சர்பிர் சிங், தனது சகோதரர்கள் மீது அரியானா நிதி ஆணையர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு பதில் ளிக்கும்படி நிதி ஆணையர் அசோக் கேம்கா உத்தரவிட்டார். இதற்கான சம்மனை ராம்தியாள் பெற்றுக் கொண்டார். ஆனால், கிருஷ்ணன் குமார், காத்மண்டு சென்றதால், சம்னை பெறவில்லை.
இதனையடுத்து உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், கிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு கிருஷ்ணன், அவர்களிடம் தனது முகவரியை தர மறுத்தார். இதுபற்றி நிதி ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரது இமெயில் அல்லது செல்போன் எண்ணை முகவரியாக கொண்டு சம்மனை அதன் மூலம் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், நீதிமன்ற முத்திரையுடன் கூடிய சம்மன் நோட்டீஸ், பிரிண்ட்அவுட் எடுக்கப்பட்டு, அது வாட்ஸ்ஆப் மூலம் கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து நிதி ஆணையரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் கேம்கா கூறுகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக நீதிமன்ற சம்மன், வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது வரை சம்மன்கள் இமெயில் அல்லது பேக்ஸ் மூலமாகவே அனுப்பப்பட்டுள்ளன.
வழக்கில் எதிர்தரப்பினருக்கு அனுப்பப்படும் சம்மன் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவே இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தோம் என்றார்.