
5 ரூபாய்க்கு மலிவு விலை மதிய உணவு…மத்திய பிரசேதத்திலும் அம்மா உணவகம்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உன்னத திட்டமான அம்மா உணவகத்தைப் பின்பற்றி டெல்லி மற்றும் ராஜஸ்தானில் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு 1 இட்லி 3 ரூபாய்க்கு தயிர் சாதம் மற்றும் சப்பாத்திகள், 5 ரூபாய்க்கு சாம்பார்,எலுமிச்சை சாதங்கள் என ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தால் ஈர்க்கப்பட்ட டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தங்களது மாநிலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஏழை மக்கள் வயிறார உண்ணும் வகையில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை குவாலியரில் தொடங்கி வைத்தார்.
அந்த்யோதயா ராசோய் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தின் 49 மாவட்டங்களில் இந்த மலிவு விலை உணவகம் செயல்படவுள்ளது.
இந்த உணவகங்களில் நான்கு சப்பாத்திகள், தால், காய்கறி கூட்டு ஆகியவை 5 ரூபாய்க்கு வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் 11 மணியிலிருந்து 3 மணி வரை இந்த கேண்டீன்கள் திறந்திருக்கும். தினசரி 2000 நபர்கள் உண்ணும் வகையில் உணவுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.