
சிவசேனா பிரச்சினை முடிந்தது….மம்தா கட்சி எம்.பி. தொடங்கிவிட்டார்
சிவசேனா எம்.பி. ரவீந்திர எம்.பி. விமான ஊழியரை அடித்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென் புதிய பிரச்சினையை நேற்று உண்டாக்கினார். இதனால், ஏர் இந்தியா விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
டிக்கெட் முன்பதிவு
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென் நேற்று நண்பகல் 2.25 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் மூலம் டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்ல தனக்கு தனது தாய், மற்றொருவருக்கு ‘எக்னாமிக் கிளாசில்’ டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.
விமானத்தில் அவசரவழி அருகே தனது தாய்க்கு டிக்கெட் ஒதுக்கி இருந்தார். அந்த இடத்தில் அவரின் தாய் சக்கர நாற்காலியில் அமர ஏதுவாக இருக்கும் என்பதால், கூடுதலாக பணம் செலுத்தி தனியார் டிக்கெட் முன்பதிவு செய்யும் தளம் மூலம் அந்த இடத்தை பெற்று இருந்தார்.
மாற்றுஇடம்
இந்நிலையில், விமான பணியாளர்கள் அவசரவழி அருகே உடல் தகுதியானவர்கள் தான் அமர வேண்டும் இதுதான் விதிமுறை. எம்.பி.யின் தாய் என்பதால், சொகுசுபிரிவான ‘பிஸ்னஸ் கிளாசில்’ இருக்கை ஒதுக்கி தருகிறோம். இந்த இடத்தில் அமர வேண்டாம் என்றனர். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, வீல் சேரில் அமரும் பயணி என்று குறிப்பிடவில்லை என்று விமான ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
39 நிமிடங்கள் தாமதம்
ஆனால், இதை ஏற்க மறுத்த டோலா சென் தொடர்ந்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து, ஆத்திரத்தில் சத்தமிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால், ஏறக்குறைய 39 நிமிடங்கள் விமானம் தாமதமாகி 3.04 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
மம்தாவை நினைத்தால் பயம்
இது குறித்து ஏர் இந்தியா விமானத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ விமானங்களின் விதிப்படி, அவசரவழி அருகே உடல் தகுதியானவர்கள் தான் அமர வேண்டும். அதைக் கேட்காமல், சக்கரநாற்காலியில் அமரும் தனது தாயை எம்.பி.டோலா அமரச் செய்தார். வேறு இடம் தருகிறோம் என்று கூறியும் அவர் ஒப்புக்கொள்ளாமல் வாக்குவாதம் செய்தார்.விமானத்தின் கேப்டன் வந்து சமாதானம் செய்தபின் 39 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
எங்களுக்கு கவலை என்னவென்றால், இதே விமானத்தில் மாலையில், முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறும் போது அவர் கோபப்படாமல் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஊழியர்கள் யாருக்கும் அவமதிப்பு ஏதும் நடக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.