உம்மன் சாண்டி உடல் 20ஆம் தேதி நல்லடக்கம்: கேரள அரசு பொது விடுமுறை அறிவிப்பு!

By Manikanda Prabu  |  First Published Jul 18, 2023, 10:37 AM IST

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அம்மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது


கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கேரளா திரும்பினார். இதனால், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த அவரது உடல்நிலை மோசமாகவே பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2006 வரை மற்றும் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை கேரள மாநில முதல்வராகவும், நான்கு முறை கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும்,  பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்த உம்மன் சாண்டி, அவரது சொந்த தொகுதியான புதுப்பள்ளியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அமைச்சர் பொன்முடி மீண்டும் ஆஜராக சம்மன்!

நாட்டின் மூத்த அரசியல் தலைவரான உம்மன் சாண்டியின் மறைவுக்கு நாடு  முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அம்மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் முறை கல்லூரிகள் இன்று செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி, கேரளா மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் PSC தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெங்களூரு இந்திரா நகரில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் டி.ஜான் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உம்மன் சாண்டியின் உடல், இன்று மதியம் கேரளா கொண்டு வரப்படவுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள உம்மன் சாண்டியின் இல்லத்துக்கு கொண்டு வரப்படும் அவரது உடல், தலைமைச் செயலகத்தில் உள்ள தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை வைக்கப்படும். பின்னர், செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் கதீட்ரல், திருவனந்தபுரத்தில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமையகம் ஆகியவற்றில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் இன்று மாலை வைக்கப்படும்.

அதனையடுத்து, நாளை காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து உம்மன் சாண்டியின் சொந்த ஊரான கோட்டயத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும் அவரது உடல், அங்குள்ள திருநக்கரா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் வருகிற 20ஆம் தேதி (நாளை மறுநாள்) பிற்பகல் 2 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!