கேரளாவில் நிவாரண அரிசி மூட்டைகளை தானே தோளில் சுமந்து சென்ற தமிழக ஐஏஎஸ் அதிகாரி… கொண்டாடும் கேரள மக்கள்!!

Published : Aug 16, 2018, 02:36 AM ISTUpdated : Sep 09, 2018, 07:16 PM IST
கேரளாவில் நிவாரண அரிசி மூட்டைகளை தானே தோளில் சுமந்து சென்ற தமிழக ஐஏஎஸ் அதிகாரி… கொண்டாடும் கேரள மக்கள்!!

சுருக்கம்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காகக் நள்ளிரவில் கொண்டு வரப்பட்ட அரிசி, கோதுமை போன்ற மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறக்க யாரும் இல்லாததால், தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம் தானே தோளில் சுமந்து இறக்கி வைத்தார். இதைப்பார்க்க மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான உமேசும் மூட்டைகளை இறக்கி வைத்தார். ஐஏஎஸ் அதிகாரிகளின் இந்த செயலை கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கடந்த மே மாதம் இறுதியில் கேரனா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இரண்டு மாதங்களாக மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போத தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இதனால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள 24 அணைகளும் நிரம்பி திறந்துவிடபட்டுள்ளன. 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதக்கின்றன.

 தொடர் மழையிலும், கடும் நிலச்சரிவிலும், பெரும் வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 67க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் இந்த கனமழையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகமது சபிருல்லா மேற்பார்வையில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த மீட்புப்பணிகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஜி ராஜமாணிக்கம் , வயநாடு சப்-கலெக்டர் என்எஸ்கே உமேஷ் ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்புப்பணிகளை முடித்துவிட்டு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜமாணிக்கமும், உமேஷும் வந்துள்ளனர். அந்தநேரத்தில், மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, கோதுமை, பருப்பு, பால் பொருட்கள் போன்றவற்றை  ஏற்றிய ஜீப் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளது.

மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கி வைத்து, ஜீப்பை அனுப்பினால்தான் அடுத்த பணிகளுக்கு அந்த வாகனம் செல்ல முடியும். ஆனால், நள்ளிரவு நேரம் என்பதால், நிவாரணப் பொருட்களை இறக்கி வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் யாரும் இல்லை.

இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி  ராஜமாணிக்கம் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை தானே தோளில் சுமந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கி வைக்கத் தொடங்கினார்.

இதைப்பார்த்த மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான  உமேஷும் மூட்டைகளை தனது தோளில் சுமந்து சென்று  இறக்கி வைத்தார்.

இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்களை கேரள மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

ராஜமாணிக்கம் மதுரை மாவட்டம், திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது  இவர் கேரள மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையராக பணியாற்றுகிறார்.  மேலும், கேரள மாநிலம், இடுக்கி, எர்ணாகுளம், திரிசூர் பகுதிகளில் பணியாற்றி உள்ளார்.

இவரின் மனைவியும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான நிஷாந்தினியும் தற்போது கேரள மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும், தமிழகத்தில் அரசுப் பள்ளியில், ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து படித்து முன்னேறியவர்கள்.

இவர்கள் இருவரும் இயற்கை வேளாண்மையின் மீதான அக்கறையால் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.

இதேபோல் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறார் குற்றவாளிகளின் அறிவை வளர்ப்பதற்காகப் புத்தகங்களை வழங்குவது போன்ற ஆக்கபூர்வப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ராஜமாணிக்கத்தின் தந்தை படித்த திருவாதவூர் அரசுப் பள்ளியில் 25 லட்சம் மதிப்பிலான ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், தங்கள் கிராம இளைஞர்களை அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் இலவச பயிற்சி மையம் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்காக சேவை செய்வதையே தங்கள் லட்சியமாகக் கொண்டு ராஜ மாணிக்கம் – நிஷாந்தினி தம்பதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!