நிபா வைரஸ் பீதி : 7 கிராமங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு.. பள்ளிகள் மூடல்..

By Ramya s  |  First Published Sep 13, 2023, 2:52 PM IST

கோழிக்கோடு மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுவன் உட்பட நான்கு பேருக்கு நிபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநில சுகாதார அமைச்சகம் நிபா எச்சரிக்கை விடுத்தது.


கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கேரள அரசு அறிவித்துள்ளது. 

கோழிக்கோடு மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுவன் உட்பட நான்கு பேருக்கு நிபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநில சுகாதார அமைச்சகம் நிபா எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் 7 கிராமங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை அதிகாரிகள் மூடினர்.

Tap to resize

Latest Videos

கேரளாவின் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், இதுவரை 130 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிபா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். நிபா எச்சரிக்கைக்கு மத்தியில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்ஐவி) குழுக்கள் கேரளாவுக்கு வந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் வைரஸ் குறித்த சோதனைகள் மற்றும் வௌவால்கள் பற்றிய ஆய்வு நடத்த மொபைல் ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. எப்படி பரவுகிறது? என்னென்ன அறிகுறிகள்? சிகிச்சை என்ன?

இதுகுறித்து அம்மாநில சட்டசைபையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தற்போது பரவும் நிபா வைரஸ் என்பது பங்களாதேஷ் மாறுபாடு என்று தெரிவித்துள்ளார். இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது என்றும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) குழு நிபா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்டஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூர், குட்டியடி, காயக்கோடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிலும்பாறை ஆகிய ஏழு கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட ஏழு கிராம பஞ்சாயத்துகளில் 43 வார்டுகளுக்குள் யாரும் வெளியேற அனுமதி இல்லை. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும், சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு நேரக் கட்டுப்பாடு எதுவும் வழங்கப்படவில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். வங்கிகள், பிற அரசு அல்லது அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில், மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பேருந்துகள் அல்லது வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி.. எச்சரிக்கையாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்..

முன்னதாக, கோழிக்கோட்டில் நிபா வைரஸ் இறப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிபா வைரஸ் எப்படி பரவுகிறது?

வெளவால்கள், பன்றிகள் அல்லது பிற நபர்களின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் இந்த நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. இது முதன்முதலில் 1999 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் பன்றிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியது. மலேசியாவின் நிபா என்ற இடத்தில் கண்டறியப்பட்டதால் இதற்கு நிபா என்ற பெயர் வந்தது. இதுவரை இந்த வைரஸுக்கு எதிராக சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இல்லை.

கேரளாவில் நிபா வைரஸ் பரவுவது இது முதன்முறையல்ல.  2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அங்கு நிபா வைரஸ் பரவியது. 2018-ம் ஆண்டில் கேரளாவில் முதன்முதலில் நிபா பரவியபோது பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் இறந்தனர். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டில், நிபா வைரஸ் காரணமாக மேலும் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!