இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: அஜெண்டா என்ன?

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ளது


பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. இதையடுத்து, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்றது.

இந்தியா கூட்டணியில் ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், சமீபத்தில் இரண்டு புதிய பிராந்திய அமைப்புகள் அக்கூட்டணியில் இணைந்தன. எனவே, மொத்தம் 28 கட்சிகள் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில், கூட்டணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

Latest Videos

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு தனது முதல் கூட்டத்தை இன்று நடத்த உள்ளது. டெல்லியில்  உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது, 2024 மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களில் கட்சிகளின் செயல்திறன் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சியின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதி பங்கீடு வியூகம் அமைக்கப்படும் என தெரிகிறது.

'பாரத் - ஜனநாயகத்தன் தாயகம்' ஜி20 மாநாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகம் இதுதான்!

பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மேற்குவங்கம், டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சவாலானதாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் முந்தைய கூட்டங்களிலும் தொகுதி பங்கீடு குறித்து உடனடியாக விவாதிக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவை வீழ்த்த சில விஷயங்களில் ஈகோ மற்றும் விருப்ப நலன்களை விட்டுக் கொடுக்கவும் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது, தேர்தல் பிரசாரம், சமூக ஊடகங்கள், ஆராய்ச்சி மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்ககப்படுகிறது. பிரச்சாரக் குழு, பணிக்குழு, ஆராய்ச்சி, சமூக ஊடகம் உள்ளிட்ட துணை குழுக்களின் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தலைவர்கள் ஆய்வு செய்வார்கள் என தெரிகிறது.

கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம்), சஞ்சய் ராவத் (சிவசேனா-யுபிடி), தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), ஜாவேத் அலி கான் (சமாஜ்வாதி), லாலன் சிங் (ஜேடி-யு), டி.ராஜா (சிபிஐ), உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முஃப்தி (பிடிபி), அபிஷேக் பானர்ஜி (திரிணாமூல்), மற்றும் ஒரு சிபிஐ-எம் உறுப்பினர் என மொத்தம் 14 பேர் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளனர்.

click me!