சருமப் பிரச்சனை விளம்பரத்தால் சர்ச்சை... மன்னிப்பு கோரியது மருத்துவமனை நிர்வாகம்... கேரளாவில் பரபரப்பு!!

Published : Feb 02, 2022, 10:50 PM IST
சருமப் பிரச்சனை விளம்பரத்தால் சர்ச்சை... மன்னிப்பு கோரியது மருத்துவமனை நிர்வாகம்... கேரளாவில் பரபரப்பு!!

சுருக்கம்

சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கேரள மருத்துவமனை விளம்பரப் பதாகையில் ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் படத்தை போட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கேரள மருத்துவமனை விளம்பரப் பதாகையில் ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் படத்தை போட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவமனைத் தரப்பில் இருந்து மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. கேரளாவின் வடக்கரா கூட்டுறவு மருத்துவமனை வெளியிட்டிருந்த விளம்பரப் பதாகையில் மரு, தோல் குறிகள், மிலியா, மொல்லஸ்கம் முதலான சருமப் பிரச்னைகளைத் தீர்க்க சிகிச்சை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த விளம்பரப் பதாகையில், ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன், உங்கள் தோல் குறிகள், மருக்கள், மிலியா, மொல்லஸ்கம் முதலான சருமப் பிரச்னைகளைச் சாதாரண வழிமுறைகளில் ஒரே விசிட்டில் நீக்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மருத்துவமனைத் தரப்பில் இருந்து மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கரா கூட்டுறவு மருத்துவமனையின் விளம்பரப் பிரிவுத் தலைவர், எங்கள் மருத்துவமனையில் புதிதாக சமீபத்தில் சரும நிபுணர் மருத்துவர் ஒருவர் இணைந்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் வழங்கப்படும் தோல் சிகிச்சைகள், வசதிகள் ஆகியவற்றை விளம்பரம் செய்வதற்காக இந்தப் பதாகையை மருத்துவமனைக்கு வெளியில் கடந்த நான்கு நாள்களாக வைத்திருந்தோம். உள்ளூரில் உள்ள வடிவமைப்பாளர் ஒருவர் இதனை வடிவமைத்திருந்தார். இதுகுறித்த புரிதலோ, ஆழ்ந்த அறிவோ இல்லாத காரணத்தால், இந்த விளம்பரப் பதாகை மருத்துவமனையில் வாசலில் வைக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தில் ஏன் நெல்சன் மண்டேலாவின் படத்தை வைத்திருக்கிறீர்கள் என ஒருவர் கேட்டார். எனவே நாங்கள் விளம்பரப் பதாகையைக் கடந்த ஜனவரி 29 அன்று நீக்கிவிட்டோம் என்று கூறியுள்ளார். மார்கன் ஃப்ரீமேன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இன்விக்டஸ் திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்தவர். எனினும், ஜனவரி 30 முதல் இந்த விளம்பரம் இணையத்தில் வைரலானது. நாங்கள் எங்கள் மன்னிப்பை பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளோம். மார்கன் ஃப்ரீமேன் மிகச் சிறந்த நடிகர் என்பதையும், உலகில் அவரை ரசிக்கும் பலரும் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்கள் தரப்பில் அறிவுக் குறைப்பாட்டால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வடக்கரா கூட்டுறவு மருத்துவமனை இணையவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!