
முதல்வருடனான பேச்சுவார்த்தையை அடுத்து புதுவை மின் ஊழியர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். புதுவை அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மின்துறையை தனியார்மயமாக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மின்துறையை தனியார்மயமாக்கும் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மின்துறை போராட்டக் குழுவினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்தனர். ஊழியர்கள் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்துறை தலைவர் சண்முகம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மின்துறை தலைமை அலுவலகம், துணைமின் நிலையங்கள், மின்துறை அலுவலகங்கள், மின் விநியோக அலுவலகங்கள் ஆகிய இடங்களில் போராட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு நீடிக்கும் என்றும் ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
இதனையடுத்து இன்று புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின் துறை தலைவர் சண்முகம், புதுவை மின் ஊழியர்கள் போராட்டக்குழு தலைவர் டி. அருள்மொழி, பொதுச் செயலாளர் பி.வேல்முருகன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும், நல்ல நிலையில் இயங்கி வரும் புதுவை அரசின் மின் துறை தனியார் மயமாக்கப்பட்டால், மின் கட்டணம் உயர்த்தப்படும், ஊழியர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையின் சொத்துக்கள் தனியார் வசமாகும். அதனால் மின்துறை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.