
வரதட்சணை தடைச் சட்டம், 1961ன் கீழ், திருமணத்தின் போது மணப்பெண்ணின் நலனுக்காக, மணப்பெண்ணுக்கு பெற்றோர் பரிசாக அளிக்கும் பரிசை வரதட்சணையாக கருத முடியாது என கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணத்தின் போது, மணப்பெண்ணின் பெற்றோர் பரிசாக அளித்த நகைகளை மணப்பெண்ணுக்குத் திருப்பித் தருமாறு கொல்லம் மாவட்ட வரதட்சணைத் தடுப்பு அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தொடியூரைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த தனி பெஞ்ச் இவ்வாறு கூறி உள்ளது.
சட்டப்படி, மணப்பெண்ணின் பெற்றோர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பரிசாகப் பெற்ற தங்க நகைகள் வரதட்சணையின் கீழ் வராது. எனவே, இதில் தலையிடவோ, உத்தரவு பிறப்பிக்கவோ வரதட்சணை தடுப்பு அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் வாதிட்டார். வரதட்சணையாக நகைகள் பெறப்பட்டதா என்பதை அதிகாரி சரிபார்த்து உறுதி செய்தாரா ? என்பது தெளிவாகத் தெரியாததால், வரதட்சணை தடுப்பு அதிகாரியின் உத்தரவை நீதிபதி எம்.ஆர்.அனிதா ரத்து செய்தார்.
திருமணத்திற்காக பெற்ற 55 சவரன் தங்க ஆபரணங்களை தன்னிடம் திருப்பித் தர வேண்டும் என்று அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கரில் நகைகள் வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் திருமணத்தின் போது மணமகள் குடும்பத்தினர் கொடுத்த நகையை திருப்பி தருவதாக மனுதாரர் தெரிவித்தார். இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்ததால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.