சேலத்தில் ஹதியா மருத்துவ படிப்பை தொடரலாம்.. போலீஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 07:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
சேலத்தில் ஹதியா மருத்துவ படிப்பை தொடரலாம்.. போலீஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

சுருக்கம்

Kerala Hadiya appears before Supreme Court verdict in love jihad case

மதம் மாற்றம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஹதியாவின் பாதுகாப்பை தமிழக போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்கொணர்வு மனு

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலா (24). தமிழகத்தில் சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காகவே அகிலா தனது பெயரை ஹதியா என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தனது மகளை மீட்டு தரக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த மே 24ந் தேதி ஹதியா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது. மேலும் ஹதியாவை எர்ணாகுளம் காப்பகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் சந்தேகம்

இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணைக்கு ஏற்றது. ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது, ஹதியாவை திமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கபில்சிபலும் இந்திரா ஜெய்சிங்கும் தொடர்ந்து வலியுறுத்தினர். அதைகேட்ட நீதிபதிகள், ‘கேரள உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு தருணங்களில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் ஆசியா, அதியா, ஹதியா என்று 3 பெயர்களை அகிலா மாற்றி மாற்றி கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணை நாங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும். ஆனால், இது உணர்ச்சிப்பூர்வமான வழக்கு. மேலும், அவசரமாகவும், ரகசியமாகவும் இந்தத் திருமணம் ஏன் நடத்தப்பட்டது? இது மதம் மாற்றி திருமணம் செய்து தீவிரவாதிகளாக மாற்றும் ‘லவ் ஜிஹாத்’ தொடர்புடையதாக இருக்கக்கூடும்’’ என்று சுப்ரீம் கோர்ட் சந்தேகம் எழுப்பியது.

யாரும் கட்டாயப்படுத்தவில்லை

மேலும் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டது. ஹதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் ஹாதியாவை நவம்பர் 27-ந் தேதி ஆஜர்படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து கொச்சியில் இருந்து ஹதியா நேற்று முன் தினம் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேச காவல்துறையினர் அனுமதிக்காத காரணத்தால் தனது தரப்பு கருத்தை சத்தமாக பதிவு செய்தார் ஹாதியா. ‘‘இஸ்லாம் மதத்துக்கு மாறு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஷெபின் ஜஹன் என் கணவர், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். நான் முஸ்லிம், எனக்கு நீதி வேண்டும்’’ என்று அவர் சத்தம் போட்டு கத்தினார்.

படிக்க விரும்புகிறேன்

இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஹதியா சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் ‘உங்களது எதிர்கால திட்டம் என்ன?’ என்று கேட்டனர். அதற்கு, ‘என்னுடைய சுதந்திரம் எனக்கு வேண்டும்’ என பதிலளித்தார். அரசின் செலவில் தொடர்ந்து படிக்க விருப்பமா? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். என்னை கவனித்துகொள்ள கணவர் இருப்பதால் அரசின் செலவில் படிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.

பாதுகாப்பு வழங்க வேண்டும்

இதனையடுத்து உச்சநீதிமன்றம், ‘‘ஹதியா மருத்துவம் படிக்கும் சேலம் மருத்துவ கல்லூரியின் டீன் அவருக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும். மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கல்லூரி நிர்வாகம் ஹதியாவை விடுதியின் விதிகளின்படி மற்ற மாணவர்களை நடத்துவது போன்று நடத்த வேண்டும். கேரள போலீஸ் ஹதியாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர் சேலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு ஹதியா மருத்துவ பயிற்சி காலமான 11 மாதங்கள் பாதுகாப்பை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு உள்ளது.

மேலும், ஹதியாவுடன் நடைபெற்ற திருமணத்தை கேரளா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷபின் ஜகான் தொடர்ந்த வழக்கு விசாரணை 2018-ம் ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!