
டிஐஜி., ரூபாவை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார் ரூபா. எல்லாவற்றுக்கும் காரணம், பெங்களூரு பரப்பர அக்ரஹார சிறையும், அதில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுமே!
4 வருட சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறையில் சிறைத் துறை விதிகளை மீறி, பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது, சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, இது குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் குற்றச்சாட்டுகள் சிலவற்றை உண்மை என்று கண்டுபிடித்தார்.
பின்னர் இவற்றை முறையாகப் பதிவு செய்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவரது துணிச்சலான நடவடிக்கைகளுக்கு கர்நாடகத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கூட ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர். அவரது டிவிட்டர் பதிவுகளை ஃபாலோ செய்பவர்கள் தமிழகத்திலும் அதிகம்தான்.
அதன் பின்னர் டிஐஜி ரூபா, வேறு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் ரூபாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடவில்லை. இந்நிலையில் அவர் கமல்ஹாசனுடன் எடுத்துக் கொண்ட படம் ஒன்றை தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்திருக்கிறார்.
புது தில்லியில் நடைபெற்ற இதழ் ஒன்றில் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
தனது டிவிட்டர் பக்கத்தில் இதனைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்வதாக ரூபா தெரிவித்திருக்கிறார். எனது தமிழ்நாடு நண்பர்கள் அனைவருக்கும்... சிறந்த நடிகர், இயக்குனர் கமல்ஹாசனை சந்தித்த போது அந்த நொடியைத் தவறவிடாமல் எடுத்துக் கொண்ட படம் என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஊழலுக்கு எதிராக போராடுவதாக, நடிகர் கமல்ஹாசன் கூறி வரும் நிலையில், நிஜமாகவே ஊழலுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வந்த ரூபாவும் கைகோத்தால், நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று ரசிகர்கள் பலர் இப்போதே கூறத் தொடங்கிவிட்டனர்.