அடிதூள்!! செல்போன் வாங்க மாணவர்களுக்கு கடன்... ஆன்லைன் கல்விக்காக அரசின் அதிரடி திட்டம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 25, 2021, 10:39 AM IST
Highlights

வித்யா தரங்கினி என்ற திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு செல்போன் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் வட்டி இல்லாத கடன் வழங்கப்பட உள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து நாடு முழுவதும் பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கடந்த ஆண்டு இறுதித்தேர்வு கூட எழுத முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில் பொது முடக்கம் இந்த கல்வியாண்டிலும் நீடித்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் செல்போன் இல்லாத ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே கேரள அரசு கொரோனா நெருக்கடி நேரத்தில் செல்போன் இல்லாததால் கல்வியை தொடரமுடியாத குழந்தைகளுக்காக வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வித்யா தரங்கினி என்ற திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு செல்போன் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் வட்டி இல்லாத கடன் வழங்கப்பட உள்ளது. 

மொபைல் போன்கள் வாங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன்களை வழங்க கூட்டுறவுத் துறை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் முதல் ஜூலை 31 வரை இந்த கடன் திட்டம் செயல்பட உள்ளது. ஒரு குழு ரூ .50,000 வரை கடன் பெறலாம் என்றும், மொபைல் போனுக்கான விண்ணப்பத்துடன் பள்ளி அதிகாரிகளின் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வட்டியில்லா கடன் தொகையை இரண்டு ஆண்டுகளுக்குள் சம தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

click me!