#BREAKING ஜூலை 31க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்... உச்சநீதிமன்றம் உத்தரவு

By Kanimozhi PannerselvamFirst Published Jun 24, 2021, 1:10 PM IST
Highlights

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை 31ம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. சிபிஎஸ்இ 12 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதேபோல தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கொரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நீதிபதி கன்வில்கர் அமர்வில், பல்வேறு மாநில அரசுகள் மாநில வழியில் நடைபெறக் கூடிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்றது. 

ஆந்திராவை தவிர கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலுமே பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளனர். அப்படியானால் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்பட உள்ளது என்பது குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது நீதிபதி கன்வில்கர், அடுத்த 10 நாட்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிடக்கூடிய முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட வேண்டும் என்றும், ஜூலை 31ம் தேதிக்குள் +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!