கொலை வழக்கில் தேடப்பட்ட டிஎஸ்பி தூக்கிட்டு தற்கொலை… திருவனந்தபுரத்தில் பரபரப்பு!

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 4:45 PM IST
Highlights

கேரளாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டிஎஸ்பி, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டிஎஸ்பி, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின் கரை பகுதியில் கடந்த 5ம் தேதி, சனல்குமார் என்ற எலக்ட்ரீஷியன் தனது காரை ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார். 

அப்போது, அங்குள்ள வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஒருவர், அந்த காரை எடுக்கும்படி சத்தம் போட்டார். இதனால், தனது காரை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு, ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த சனல்குமார், காரை வெளியே எடுக்க போதிய இடம் இருக்கிறது என கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட.து.

இதில், ஆத்திரடைந்த அந்த நபர், நான் யார் தெரியுமா? போலீஸ் டிஎஸ்பி' என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். அந்த நேரத்தில், அந்த சாலையில் ஒரு வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென அவர், சனல்குமாரை அந்த வாகனத்தின் மீது தள்ளினார். இதில், வாகனம் மோதி படுகாயமடைந்த சனல்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

அப்போது போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது, சனல்குமாரை தள்ளியது டி.ஸ்பி ஹரிகுமார் என தெரியவந்தது. இச்சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் டிஎஸ்பி ஹரிகுமார் தலைமறைவாகிவிட்டா.ர். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

மேலும், வாகனம் வேகமாக வருகிறது என்பதை நன்கு தெரிந்து, வேண்டும் என்றே சனல்குமாரை ஹரிகுமார் தள்ளி விட்டார் என கேரள போலீசார் முடிவுக்கு வந்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இதையடுத்து டிஎஸ்பி ஹரிகுமார், தமிழகத்தின் பல பகுதிகளில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், திருவனந்தபுரம் அருகே கல்லம்பாலம் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் ஹரிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

ஹரிகுமார் இதுவரை நெய்யாற்றின் கரை பகுதியில் வசித்து வந்தார். கல்லம்பாலம் பகுதியில் உள்ள வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அவரது மாமியார் மட்டுமே தினமும் அந்த வீட்டுக்கு சென்று வருவார். இன்று காலை நாய்க்கு உணவு அளிக்க அந்த வீட்டுக்கு, ஹரிகுமாரின் மாமியார் சென்றபோது அவர் தூக்குப்போட்டு இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

click me!