கேரள மாநிலத்தின் 60-வது ஆண்டு விழா : ஆளுநர் , முன்னாள் முதல்வர்களுக்கு ‘நோ என்ட்ரி’ - சர்ச்சையில் சிக்கிய பினராயி விஜயன்

First Published Nov 2, 2016, 11:25 PM IST
Highlights


கேரள மாநிலம் உருவாகி 60-வது ஆண்டு விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த நிலையில், ஆளுநர் சதாசிவம், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் உம்மன் சாண்டி, ஏ.கே.அந்தோனி மற்றும்மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன்,  ஆகியோருக்கு மாநில அரசு சார்பில் அழைப்பு விடுக்கவில்லை.

அடுத்த ஓர் ஆண்டுவரை நடத்த இருக்கும் 60-வது வைர விழாவில் முன்னாள் முதல்வர்களும், ஆளுநரும் புறக்கணிக்கப்பட்டு இருப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னனி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கேரள மாநிலம் உருவாகி 60- ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை அரங்கில் மாநில அரசு சார்பில் நேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “ மாநில ஆளுநர் சதாசிவத்தை இந்த அழைக்க அரசு மறக்கவில்லை. ஆளுநர் கலந்து கொள்வதற்கு என சில விதிமுறைகள் உள்ளன என்பதால், ஒட்டுமொத்த ஆலோசனையின் பேரில், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநர் வந்திருந்தால் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்று இருக்க முடியும். இப்போது பல்வேறு தரப்பில் இருந்து 60 பேர் மேடையில் இருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு நடக்க இருக்கும் விழாவில், அடுத்து நடக்கும் சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு ஆளுநருக்கு முறைப்படி அழைப்புவிடுக்கப்படும். '' எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் அழைக்கப்படாதது குறித்து அவரின் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், “ அச்சுதானந்தனுக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால், அவர் பங்கேற்கவில்லை. இதில் வேறொன்றும் இல்லை. இதற்காக அச்சுதானந்தன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை, மனவருத்தமும் கொள்ளவில்லை'' என்று தெரிவித்தன.

இது குறித்து கே.பி.சி.சி. கட்சியின் தலைவர் வி.எம். சுதீரன் கூறுகையில், “ மாநிலத்தின் 60-வது ஆண்டுவிழாவில் முன்னாள் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்காமல், அவர்களை அரசு அவமானப்படுத்திவிட்டது. அவர்களை விழாவுக்கு அனுமதிக்கவும் இல்லை. முதல்வர் பினராயி விஜயன் தொலைபேசியில் அழைப்பு விடுத்த நிலையில், டெல்லியில் இருந்து புறப்பட்டு  ஏ.கே.அந்தோனி விழாவில் பங்கேற்க வந்தார். ஆனால், அவரின் பெயர் நிகழ்ச்சி நிரல் அட்டையில் இல்லை. அதேபோல, உம்மன் சாண்டிக்கும் அழைப்பு இல்லை'' என்றார்.

மாநில ஆளுநர் மாளிகையில் வட்டாரங்கள் கூறுகையில், “ மாநில அரசு சார்பில் நடக்கும் விழாவில் ஆளுநருக்கு பங்கேதும் இல்லை. ஆளுநருக்கு அறிவிக்கவும், அழைக்கவும் இல்லை'' எனத் தெரிவித்தன.

பாரதியஜனதா அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அழைக்கப்படாதது குறித்து பாரதிய ஜனதா கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புசட்டத்தை மீறிய செயல் என்று மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

 

click me!