1465 வழித்தட கி.மீ., 139 ரயில் என்ஜின்களில் கவாச் அமைப்பு: மத்திய அமைச்சர் தகவல்!

By Manikanda PrabuFirst Published Dec 8, 2023, 6:12 PM IST
Highlights

கவாச் அமைப்பு 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் நிகழும் ரயில் விபத்துக்களின் போதெல்லாம் இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அண்மையில் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தின் போது கவாச் அமைப்பு பேசுபெருளானது. அந்த சமயத்தில், கவாச் அமைப்பு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விவரிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பலரும், கவாச் அமைப்பு என்ன ஆனது என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், கவாச் அமைப்பு 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கவாச் அமைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

Latest Videos

அதில், “கவாச் என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) அமைப்பாகும். இது உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக உயர்ந்த பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது. தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் ரயிலை இயக்க லோகோ பைலட்டுக்கு கவாச் உதவுகிறது, மேலும் மோசமான வானிலையின் போது ரயிலைப் பாதுகாப்பாக இயக்கவும் இது உதவுகிறது.

பயணிகள் ரயில்களில் முதல் கள சோதனைகள் பிப்ரவரி 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும், 3ஆவது தரப்பினரால் சுதந்திரமான பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையிலும், 2018-19 ஆம் ஆண்டில் கவாச் வழங்க மூன்று நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவாச் ஜூலை 2020-ல் தேசிய ஏடிபி அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கவாச் இதுவரை தென் மத்திய ரயில்வேயில் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா வழித்தடங்களுக்கு (சுமார் 3000 வழித்தட கி.மீ) கவாச் டெண்டர்கள் வழங்கப்பட்டு, இந்த வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 6000 கி.மீ.க்கு சர்வே, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் விரிவான மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. கவாச் திட்டத்தை செயல்படுத்துவதை அதிகரிக்கவும், திறனை அதிகரிக்கவும் மேலும் ஓ.இ.எம்.களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

NHAI விதிகளுக்குப் புறம்பான சுங்கச் சாவடி தமிழகத்தில் இல்லை: மத்திய அரசு பதில்!

பாதுகாப்புக்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. பாதுகாப்பின் அளவை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

கவாச் என்றால் என்ன?


விபத்தில்லா ரயில் பயணம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் கவாச் எனப்படும் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கவாச் எனப்படும் உள்நாட்டு தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP - Automatic Train Protection) அமைப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவில் ரயில் சேவைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. கவாச் தொழில்நுட்பம், இந்திய ரயில்வேக்கான தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கவாச் தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு அமைப்பாகும். ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (RDSO) மூலம் மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கவாச் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. கவாச் அமைப்பின் முக்கிய அம்சங்களாக, ஆபத்து நேரங்களில் சிக்னல்களை தாண்டும்போது, ரயில் ஓட்டுநர்களுக்கு உதவும் வகையிலும், ரயில் ஓட்டுநர்கள் செயல்பட தவறும் பட்சத்தில் தானாகவே பிரேக் போடும் வகையிலும், அடர்ந்த மூடுபனி போன்ற பாதகமான வானிலையின் போது உதவும் வகையிலும் கவாச் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அமைப்பு ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்கும். அத்துடன், ரயிலின் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட வேகமாகவும் இயங்க அனுமதிக்காது.

பனிமூட்டமான சூழ்நிலைகளிலும், அதிக வேகத்திலும் மேம்பட்ட பார்வைக்காக கேபினில் லைன்-சைட் சிக்னல் காட்சியை வழங்குதல், இயக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்துதல், லெவல் கிராசிங்குகளில் தானியங்கி விசில், அவசரகால சூழ்நிலைகளில் ரயில்களைக் கட்டுப்படுத்த SOS அம்சம், மோதலைத் தவிர்க்க ரயில் ஓட்டுநர்களிடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களும் இந்த கவாச் அமைப்பில் அடங்கும்.

click me!