
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாகுதீன் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தாக்குதலில் காயம் அடைந்தனர்.
2 தீவிரவாதிகள்
காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக இரு தீவிரவாதிகள் வாகனத்தில் சென்ற கொண்டு இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.
உடனடியாக போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அமர்கார் பகுதியில் இரு தீவிரவாதிகளையும் அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர்.
துப்பாக்கிச் சண்டை
உடனே தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசி எறிந்து போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் திருப்பித்தாக்கி பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாகுதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு
துப்பாக்கி சண்டையில் போலீஸ் சூப்பிரண்டு ஒருவரும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து இரு துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 4 கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்களும் வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
அடையாளம் தெரிந்தது
பலியானவர்களில் ஒருவர் அசாருதீன் என்கிற காஜி உமர் என்றும், மற்றொருவர் சாஜத் அகமது என்கிற பாபர் என்றும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உள்ளுர் தீவிரவாதிகளான அவர்கள் இருவரும், அந்த பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மிகப் பெரிய நாசவேலை முறியடிப்பு
காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ‘‘இந்த அதிரடி நடவடிக்கை மூலம் அவர்கள் மேற்கொள்ள இருந்த மிகப் பெரிய நாச வேலை முறியடிக்கப்பட்டதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருவரை பலி கொடுத்த ஹிஸ்புல் முஜாகுதீன் இயக்கம், தங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும், பலியானவர்களில் ஒருவரான அசாதுதீன் கல்லூரி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர் என்றும், அவர் கூறினார்.