
இரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. பஞ்சாபில் 70 சதவீதமும், கோவாவில் 83 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
பஞ்சாப், கோவா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல்கள், பிப்ரவரி 4-ந்தேதி (நேற்று தொடங்கி) மார்ச் 8-ந்தேதி வரை நடைபெறுகின்றன.
அமைதியாக நடந்தது
பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய இரு மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பஞ்சாபில் 117 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளும் உள்ளன
ஒரு சில சிறிய சம்பவங்களைத் தவிர, இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
தொழில் நுட்பக் கோளாறு
பஞ்சாப் தேர்தலில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு தணிக்கை எந்திரங்கள் சிலவற்றில் தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
ஜலந்தர் அருகில் உள்ள பீம் நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 35) என்பவர், வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
முதல்வர் நன்றி
இதனால் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இடை இடையே நிறுத்தப்பட்டன.
நேற்று வாக்குப்பதிவு முடிவடைவதற்கு சற்று முன்பாக, அமைதியாக தேர்தல் நடந்ததற்காக, மாநில மக்களுக்கு முதல்-அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
70 சதவீத வாக்குப்பதிவு
மொத்தம் உள்ள 1.98 கோடி வாக்காளர்களில் ஏறத்தாழ 70 சதவீதம் பேர் வாக்களித்து இருப்பதாக, முதல்-அமைச்சர் பாதலின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட முதல் கட்ட அறிக்கையில் கூறி இருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் 79 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல், துணை முதல்-அமைச்சர் சுக்பீர்சிங் பாதல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும், கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளருமான கேப்டன் அமரிந்தர் சிங் ஆகியோர் நேற்று காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மும்முனைப் போட்டி
இந்த தேர்தலில் பா.ஜனதா-அகாலிதள கூட்டணி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கூட்டணி 117 தொகுதிகளிலும் களத்தில் உள்ளனர். (பா.ஜனதா கூட்டணியில் அகாலிதளம் 94 தொகுதிகளிலும் பா.ஜனதா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி 112 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
காலியாக இருந்த அமிர்தசரஸ் மக்களவை தொகுதிக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
கோவாவில் 83 சதவீதம்
கோவா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது. காலையில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டனர்.
40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில், மொத்தம் உள்ள 11.10 லட்சம் வாக்காளர்களில் 83 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவானதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
உயரும் வாய்ப்பு
மாலை 5 மணிக்கு மேலும் சில வாக்குச்சாவடிகளில் ஏராளமானவர்கள் ஓட்டளிக்க காத்திருந்ததால், வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் இந்த மாநிலத்தில் 83 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மனோகர் பாரிக்கர்
பா.ஜனதா கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று கருதப்படும் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் ஆகியோர் நேற்று காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
40 தொகுதிகளில், சுயேச்சைகள் உள்ளிட்ட 250 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுடன், எம்.ஜி.பி. தலைமையிலான கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது.
தனித்துப் போட்டி
கடந்த தேர்தலில் எம்.ஜி.பி.யுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜனதா இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
எம்.ஜி.பி. கட்சி பா.ஜனதாவுடன் உறவை துண்டித்து, ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து விலகிய தலைவர் சுபாஷ் வெலிங்கர் மற்றும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்ததால், பா.ஜனதா இந்த முடிவை எடுத்தது.
முதியவர் பலி
மாநிலம் முழுவதும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
பனாஜி நகரில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு வெளியே காத்து நின்ற லெசிலி சல்தான்ஹா என்ற 78 வயது முதியவர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.