133 நாட்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பியது காஷ்மீர் : அலுவலகங்கள், கடைகள் செயல்படத் தொடங்கின

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
133 நாட்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பியது காஷ்மீர் : அலுவலகங்கள், கடைகள் செயல்படத் தொடங்கின

சுருக்கம்

கலவரம், கல்வீச்சு, துப்பாக்கிசூடு என்று அமைதியற்ற சூழ்நிலை நிலவிவந்த நிலையில், 133 நாட்களுக்கு பின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

காஷ்மீரில் அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று வழக்கம் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின.

கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் புர்ஹான் வானி ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அங்கு பிரிவினைவாதிகளின் ஆதரவுடன் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரம், வன்முறை, கல்வீச்சு என கடந்த 120 நாட்களுக்கு மேலாக நடந்தது.

இதில் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 86 பேர் பலியானார்கள், பாதுகாப்புபடையினர் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டு நாள்தோறும் சில மணி நேரம் வியாபாரம் நடத்தின. பின்னர் பிரிவினைவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து மூடினார். 

இந்தநிலையில், காஷ்மீரில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

ஸ்ரீநகரில் அரசுப் பஸ் போக்குவரத்து, தனியார் வாகனங்களும் நேற்று வழக்கம் போல் சாலையில் இயங்கத் தொடங்கின. இதனால், எப்போதும் வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.  உடனடியாக, போக்குவரத்து போலீசார் வரவழைக்கப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். மேலும், இது போல் காஷ்மீரின் பல மாவட்டங்களுக்கு வழக்கம் போல் பஸ் போக்குவரத்து செயல்படத் தொடங்கியது.

ஏற்கனவே, கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு தேர்வுகள் அமைதியான முறையில் நடந்தன. இந்நிலையில், வரும் வாரத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் நடக்கத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சூழ்நிலை மேம்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த போஸ்ட் பெய்ட் செல்போன்  சேவை தொடங்கப்பட்டது. ஆனால், பிரீபெய்ட் செல்போன் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!