
அசாம் மாநிலம், தின்சுக்கியா மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, உல்பா, மற்றும் என்.எஸ்.சி.என். தீவிரவாதிகள் மறைந்து இருந்து நேற்று நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அசாம் மாநிலம், மலைப்பகுதியில் அமைந்துள்ளது தின்சுக்கியா மாவட்டம். அங்குள்ள பென்கிரி பகுதியில் நேற்று ஒரு ஜீப் மற்றும் லாரியில் ராணு வீரர்கள் வழக்கமான ரோந்துப்பணிக்கு சென்றனர். அப்போது, சாலையின் இருபுறங்களில் மறைந்திருந்த உல்பா மற்றும் என்.எஸ்.சி.என். தீவிரவாதில் 15-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக ராணுவ வீரர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். இதில் 3 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தின்சுக்கியா போலீஸ் சூப்பிரெண்ட் முக்தாஜோதி மகாந்தா கூறுகையில், “ ராணுவ வீரர்கள் வந்த ஒரு ஜீப் மற்றும் சக்திமான் லாரியை குறிவைத்து, 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மறைந்து இருந்து தாக்கினர். தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், ஏ.கே.47 துப்பாக்கிகள், மார்டர் குண்டுகள், சிறிய ராக்கெட்டுக்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரு வாகனமும் கடுமையாக சேதமடைந்தன. இந்த தகவல் கிடைத்து நாங்கள் சம்பவத்துக்கு சென்று காயமடைந்த 6 வீரர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், தீவிரவாதிகள் தரப்பில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, இந்த சம்பவம் குறித்தும், அதன்பின் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் தெரிவித்தார்.
பாக்ஸ் மேட்டர்
ராஜ்நாத்சிங், சோனாவால் கண்டனம்..
ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தின்சுக்கியா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காயமடைந்த வீரர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், போலீஸ் ஐ.ஜி. முகேஷ் சாகேயே சம்பவ இடத்துக்குச் சென்று, சூழ்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அறிக்க உத்தரவிட்டுள்ளார். அது குறித்து அவர் வௌியிட்ட அறிக்கையில், “ ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமாக தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்பமாட்டார்கள்'' என்றார்.