காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது
கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டோர் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு எட்டு நாள் சுற்றுப்பயணம் செய்து வாரணாசி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றனர்.
இந்த நிலையில், ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின்கீழ் காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை மார்கழி மாத முதல்நாளான வருகிர டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, விண்ணப்பப் பதிவுக்கான இணைய முகப்பை (Portal) சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆர்வமுள்ள நபர்கள் www.kashitamil.iitm.ac.in என்ற ணையமுகப்பில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8 டிசம்பர் 2023 ஆகும்.
பண்டைய இந்தியாவில் இரு முக்கிய கற்றல், கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான வாழ்க்கைப் பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முதல் நிகழ்வைப் போன்றே, பல்வேறு தரப்பு மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இம்முறையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்றுவர 8 நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், மதம் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாகப் பிரித்து அனுப்பப்படுவார்கள்.
ஒவ்வொரு குழுவிற்கும் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, காவிரி என புனித நதிகளின் பெயரிடப்படும். வரலாறு, சுற்றுலா, மத ஆர்வமுள்ள இடங்களுக்குச் செல்வதுடன், இக்குழுவினர் உத்தரப்பிரதேச மக்களை அவர்களின் பணியிடங்களிலேயே தொடர்பு கொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள்.
விழிப்புணர்வை உருவாக்குதல், நேரடியாகச் சென்றடைதல், மக்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்துதல், கலாச்சாரத்தை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காசி தமிழ் சங்கம் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடைமுறைகள் தொடர்பான நுண்ணறிவைப் பெறவும், கற்றலை மேம்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் ஏதுவாக உள்ளூரில் தொழில் செய்வோருடன் (நெசவாளர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்கள் போன்றோர்) அதிக ஈடுபாடு மற்றும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவில் இடம்பெறவிருக்கும் பிரதிநிதிகள் அதற்கென அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வான பின்னர், அடுத்தகட்ட நடைமுறை குறித்து பிரதிநிதிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகம் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படும். இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) உள்ளிட்ட கலாச்சார அமைச்சகங்கள், ஐஆர்சிடிசி உள்ளிட்ட ரயில்வே துறை, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல் (ODOP), சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு (SD&E) ஆகிய துறைகளுடன், உத்தரப்பிரதேச அரசின் தொடர்புடைய துறைகளும் இதில் பங்கேற்க உள்ளன.
முதல்கட்டத்தில் கிடைக்கப் பெற்ற கற்றல், ஆராய்ச்சிக்கு அளித்துவரும் நற்பெயரைப் பயன்படுத்தி, ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி பிஎச்யு ஆகியவை முறையே தமிழ்நாட்டிலும் உத்தரப் பிரதேசத்திலும் செயல்படுத்தும் முகமைகளாக இயங்கும்.
ரயிலில் புறப்பட்டுச் செல்லவும்- திரும்பி வரவும் தலா 2 நாட்கள், வாரணாசியில் 2 நாட்கள், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் தலா ஒருநாள் என குழுவினருக்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கலை- கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், தமிழ்நாடு மற்றும் காசியின் சிறப்புத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். வாரணாசியில் உள்ள நமோகாட்-டில் தமிழ்நாடு, காசியின் கலாச்சாரங்கள் சங்கமிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
வாட்ஸ் அப் யுனிவெர்சிட்டிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் குட்டு!
இடைப்பட்ட நாட்களில் இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், எஜுடெக், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பம் போன்ற அறிவுசார்ந்த பல்வேறு அம்சங்களில் கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் எனக் கல்வி பரிமாற்றங்கள் நடைபெறும்.
வல்லுநர்கள், அறிஞர்கள் மட்டுமின்றி, மேற்கூறிய துறைகளில் தொடர்புடைய உள்ளூர் நடைமுறைப் பயிற்சியாளர்கள், தமிழ்நாடு, வாரணாசியைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இந்தப் பரிமாற்றங்களில் பங்கேற்பார்கள். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் பரஸ்பர கற்றல் வாயிலாக நடைமுறைச் செயல்திறனுடன் புதுமைக் கண்டுபிடிப்புகளும் உருவாகலாம்.
அர்ப்பணிப்புடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நேரில் சென்றடைய வைக்கவும் தமிழ்நாட்டு நிறுவனங்களோடு ஒருங்கிணைக்கும் பணிகளை ஐஐடி மெட்ராஸ் மேற்கொள்ளும். பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் இதர பிரச்சார நிகழ்ச்சிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.