ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை!

By Manikanda Prabu  |  First Published Mar 6, 2024, 3:07 PM IST

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது


தமிழகத்தின் முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் முன்னரே ஜெயலலிதா காலமாகி விட்டார். 

முன்னதாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தது. விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள், வெள்ளிப் பொருட்கள், தங்க நகைகள், கற்கள் பதித்த நகைகள் உள்ளிட்ட கோடிகணக்கான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Latest Videos

undefined

தொடர்ந்து, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை ஏலம் விடக் கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், கர்நாடக அரசு சார்பில் ஆஜராக கிரண் ஜவாலி என்ற அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்தது. ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்: கமல்ஹாசன் சீற்றம்!

இந்த வழக்கு விசாரணையின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நடத்துவதற்கு கர்நாடக அரசு செய்த செலவினங்களுக்காக கர்நாடக அரசின் பெயரில் 5 கோடி ரூபாய்க்கான வரைவோலையை (டிடி) அனுப்புமாறும் ஸ்டேட் பேங்க் சென்னை கிளை தலைமை மேலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து வழக்கின் விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

click me!