
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் பயிர்காப்பீடு தொகை என்ற பெயரில் ஒரு ரூபாயை இந்திய பேமெண்ட் கார்பரேஷன் டெபாசிட் செய்ததால் விவசாயிகள் கொந்தளித்தனர்.
இதனால், தார்வாட், ஹூப்ளி, பிஜபூர், பகல்கோட் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்க தயாரானார்கள். ஆனால், அதிகாரிகள் தலையிட்டு உரிய விளக்கம் அளித்தபின், விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தில், விவசாயிகள் வறட்சியில் இருந்து பயிர்களைக் காக்க மத்தியஅரசின் பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தனர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மாநிலத்தில் பல விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை, ஆதார் எண்ணோடு இணைத்து இருக்கிறார்களாக என்பது தெரியவில்லை. இதையடுத்து, இந்திய பேமெண்ட் கார்பரேஷன் விவாசயிகள் கணக்கே சோதிக்க ஒரு ரூபாய் டெபாசிட் செய்ததுதான் பெரிய பிரச்சினயைாக மாறிவிட்டது.
இது குறித்து தார்வாட் மாவட்ட விவசாய ஆணையர் எஸ்.பி. பொம்மனஹல்லி கூருகையில், “ தார்வாட் மாவட்டத்தில் மட்டும் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிவாரணத் தொகையை 3,500 விவசாயிகள் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வங்கிக்கணக்கு, ஆதார் எண்ணோடு இணைக்கப்படவில்லை.
இதையடுத்து, சமீபத்தில் ஆதார் எண்ணை வங்கிக்கணக்கோடு இணைத்தவர்கள், ஆதார் எண் அளித்தவர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்குக்கு மட்டும் ஒரு ரூபாய் டெபாசிட் செய்து, சரியான நபர்கள்தானா என்று தேசிய பேமெண்ட் கார்பரேஷன் சோதித்து பார்த்தது.
ஆனால், இதை தவறாகப் புரிந்து கொண்ட விவசாயிகள், பயிர்காப்பீட்டு தொகையாக ஒரு ரூபாய் டெபாசிட் செய்து இருக்கிறார்கள் என நினைத்து போராட்டத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டனர்.
உண்மையில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகள் வங்கிக்கணக்கில் இந்த வாரத்துக்குள் முழுத்தொகையும் டெபாசிட் செய்யப்பட்டு விடும், கவலைப்பட வேண்டாம், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன எனக்கூறியபின் விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர்” எனத் தெரிவித்தார்.