சோடி போட்டு பாப்போமா சோடி...  ரூ.1,609 கோடி சொத்துடன் கெத்து காட்டும் பாஜக அமைச்சர்!

By SG Balan  |  First Published Apr 18, 2023, 8:54 PM IST

எம்.எல்.சி.யாக இருக்கும் நாகராஜு, 2020 ஜூன் மாதம், தன் மனைவின் சொத்துடன் சேர்த்து ரூ.1,220 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக அறிவித்திருந்தார். இப்போது ரூ.1,073 கோடியாகக் குறைத்திருக்கிறார்.


கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்யும் அரசியல்வாதிகளின் சொத்து விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவரான கர்நாடக அமைச்சர் எம்.டி.பி. நாகராஜுவின் ​மொத்த சொத்து மதிப்பு ரூ.1,609 கோடி என்று அறிவித்துள்ளார்.

திங்களன்று, பெங்களூரு புறநகரில் உள்ள ஹோஸ்கோட் சட்டமன்றப் பிரிவில் ஆளும் பாஜக வேட்பாளராக நாகராஜு மனு தாக்கல் செய்தார். தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், விவசாயம் மற்றும் வணிகம் ஆகியவை தனது தொழில் என்று குறிப்பிட்டுள்ள நாகராஜு, தனது மனைவி எம். சாந்தகுமாரியின் சொத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.536 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை வைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

பிரமாணப் பத்திரத்தின்படி, நாகராஜு - சாந்தகுமாரி தம்பதியின் அசையா சொத்து மதிப்பு ரூ.1,073 கோடி. எம்.எல்.சி.யாக இருக்கும் நாகராஜு, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, மனைவியின் சொத்தையும் சேர்த்து ரூ.1,220 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தம்பதியரின் மொத்த கடன்கள் ரூ.98.36 கோடி என தெரிவித்துள்ளனர். 72 வயதான நாகராஜு 9ஆம் வகுப்பு வரை படித்தவர். விவசாயம், வீட்டு சொத்து, வியாபாரம் மற்றும் பிறவற்றையும் தனது வருமான ஆதாரமாகக் கூறியுள்ளார். மனைவியின் வீட்டு சொத்துகளையும் விவரித்துள்ளார்.

டிகே. சிவகுமார்

மறுபுறம், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் கனகபுரா தொகுதியில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரும் மலைக்க வைக்கும் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவரின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1,214 கோடி எனக் கூறப்படுகிறது.

டிகே சிவகுமாரின் மனைவி உஷா சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ.153.3 கோடி என்றும் பிரிக்கப்படாத குடும்பத்தின் சொத்து ரூ.61 கோடி என்றும் கூறியுள்ளார். இத்துடன் தனக்கு ரூ.226 கோடி மதிப்பிலான கடன் உள்ளதாவும் பிரமாணப் பத்திரத்தில் சொல்லி இருக்கிறார்.

தனது குடும்பத்தின் வருமானம் விவசாயம், வாடகை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் செய்யும் வணிகம் மூலம் வருவதாகக் காட்டியுள்ளார். டி.கே.சிவகுமார் பெயரில் ரூ.244.93 கோடியும், அவரது மனைவி மற்றும் மகன் ஆகாஷ் பெயரில் முறையே ரூ.20.3 கோடியும், ரூ.12.99 கோடியும் கடன் இருக்கிறதாம்.

click me!