
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரின் வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு இமெயில் அனுப்பி உள்ளனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து, தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த வாரம் சென்னையில்முகாமிட்டு இருந்தனர். ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்தது. இந்த மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம். அவசரமாக விசாரிக்க முடியாது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என நீதிபதிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனால், அதிருப்தியடைந்துள்ள நீதிபதி கர்ணன், குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியை சந்தித்து முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக வாதாடி வரும் வழக்கறிஞர்கள்மாத்யூஸ் ஜே. நெடும்பரா, ஏ.சி. பிலிப் ஆகியோர் குடியரசு தலைவருக்கு இ-மெயில்அனுப்பி உள்ளதாக கர்ணன் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அரசியல் சாசன 72 பிரிவின்படி, ஒருவர் மீதான தண்டனையை குறைக்கவும், ரத்து செய்யவும் குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருப்பதால் அவர்கள் இதை அனுப்பி உள்ளனர்.