
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு தடை இளைஞர்கள், மாணவர்களின் தீவிர எழுச்சி, அறவழிப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து, இந்த வழியைப் பின்பற்றி கர்நாடாக மாநிலத்தில் தடைபட்டுள்ள பாரம்பரிய எருமை பந்தயத்துக்கு அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் கம்பளா என்ற எருமை மாட்டு பந்தயம் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்தது.
சேற்றில் எருமை மாடுகளை ஓடவிட்டு பந்தயம் நடத்துவார்கள். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, கம்பளா போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடத்த முடியாமல் போனது.
எருமைப் பந்தயத்தை நடத்தக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கம்பளா போட்டிக்குழுவைச் சேர்ந்தவர்கள், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தனர்.
ஆனால், அங்கேயும் இடையூறு செய்த பீட்டா அமைப்பு, உச்சநீதிமன்றம் உத்தரவை மேற்கோள்காட்டி அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரியது. இதையடுத்து, அந்த மனுவை தலைமைநீதிபதி எஸ்.கே. முகர்ஜி ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து கம்பளா சமூகத்தினரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து கம்பளா குழுவின் தலைவர் அசோக் ராய் கூறுகையில், “ வரும் வியாழக்கிழமை முதல் முதல் நாங்கள் மங்களூரு மண்டலத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
இதற்காக நாங்கள் சந்தித்து பேச இருக்கிறோம். மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, அரசியல்வாதிகளையும், நாட்டையே திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் செய்ய போகிறோம்.
உடுப்பி மற்றும் மங்களூரு பகுதியில் இருந்து 200 ஜோடி காளைகள் வரை போட்டியில் கலந்து கொள்ளும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கிடைத்துள்ளதால், கம்பளா போட்டிக்கும் அனுமதி கிடைக்கும்.
இதில் மாடுகளை கொடுமைப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பீட்டா அமைப்பின் தீய நோக்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் எங்கள் போராட்டத்தின் மூலம் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார்.