
ஜல்லிக்கட்டு விசயத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் நடவடிக்கையில் இறங்கியுள்ள தமிழக அரசு, விலங்குகள் நல அமைப்பான பீட்டா வை தடை செய்வதற்கான அனைத்து சட்ட விஷயங்களையும் ஆலோசித்து வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யாததால், பீட்டா அமைப்பின் கணக்குகளை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் தீர்மானத்துடன், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்துவதற்கு மாநில அ ரசு அவசரச்சட்டம் இயற்றி அடுத்த சில நாட்களில் ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், போரட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் முக்கியக் கோரிக்கையான பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்தும் மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “ தமிழகத்தில் பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து நாங்கள் ஆலோசிக்க இருக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடும் இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அதை நோக்கி நாங்கள் நகர இருக்கிறோம். பீட்டா அமைப்பை தடை செய்வதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆலோசித்து வருகிறோம். அதேசமயம், நீதிமன்றத்தின் கண்டனத்தை பெறும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்க விருப்பமில்லை. எங்கள் கட்டியின் பொதுச்செயலாளர் சசிகலா, பீட்டா அமைப்பை தடை செய்ய முடிவு செய்துள்ளார். இது நடக்கும்.'' என்று தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா அமைப்பு கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. ஏறக்குறைய கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய மதிப்பின்படி ரூ. 2.26 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவு செய்தது என்பதற்கான கணக்குகளை இன்னும் தாக்கல் செய்யவில்லை.
கடந்த 11-ந்தேதி உச்சநீதிமன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் ஆண்டுக்கு ரூ. 30 லட்சத்துக்கு அதிகமாக நன்கொடை பெறும் நிறுவனங்கள் கண்டிப்பாக வருமான கணக்குகளை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், விலங்குகள் நலவாரியம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா கடந்த 3 ஆண்டுகளாக வரி, வருமானம் விவரங்களை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யாமல் அரசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறது.
இந்த அமைப்பால் தமிழ்நாட்டில் தேவையில்லாத குழுப்பங்களும் , போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதையடுத்து, பீட்டா அமைப்பின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.