
நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தியதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது, தங்கம் கடத்துவதற்காக தன்னை மிரட்டியதாக ராவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், விமான நிலையத்தில் ராவுக்கு உதவியதில் கான்ஸ்டபிள் பசவராஜுவின் தொடர்பு இருப்பதாகவும் ரன்யா ராவ் கூறியுள்ளார். மார்ச் 4ஆம் தேதி கைது ரன்யா ராவ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து , லாவெல் சாலையில் உள்ள நந்த்வானி மேன்ஷனில் இருக்கும் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்குப் பிறகு அவரது வீட்டிலிருந்து மூன்று பெரிய பெட்டிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். பறிமுதல் செய்தவற்றின் மொத்த மதிப்பு ரூ.17.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ரன்யா ராவ் தன்னுடன் வந்த போலீஸ் கான்ஸ்டபிள் பசவராஜூவின் உதவியுடன் பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்க்க முயன்றார். ஆனால், அவரது நடவடிக்கைகள் குறித்து சந்தேகித்த DRI அதிகாரிகள், கடத்தல் தங்கத்துடன் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தார் பாஜக எம்.பி. தேஜாஸ்வி சூர்யா!
ரன்யாவிடம் சோதனை செய்தபோது, அவரது ஜாக்கெட்டிற்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். 14.2 கிலோ எடை கொண்ட அந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.12.56 கோடி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் விசாரணைக்காக ரன்யா ராவ் நாகவராவில் உள்ள DRI அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரன்யா ராவ் இப்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த ரன்யா ராவ்?
ரன்யா ராவ் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி கே. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். ரன்யா தனது கணவர் ஜதினுடன் துபாய்க்கு அடிக்கடி பயணம் செய்வது குறித்து அதிகாரிகள் சந்தேகித்தனர். அவருக்கு அங்கு எந்த வணிகத் தொடர்போ குடும்பத்தினரோ இல்லை. அவர் அடிக்கடி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளைச் சுலபமாகக் கடந்து செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
துபாய் அல்லது பிற நாடுகளில் அவருக்கு எந்தத் தொழிலும் இல்லாததால், சமீப காலமாக ரன்யா ராவ் மேற்கொண்ட பல வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் அவரது கணவரிடமும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.
பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்... ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி எச்சரிக்கை!