
கைலாச மானசரோவர் யாத்திரை ரத்து…
இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றமான சூழல் காணப்படுவதால், சிக்கி்மின் நாது லா வழியே செல்லும் மானசரோவர் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில்…
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாச மானசரோவர் பகுதி உள்ளது. இதனை இந்துக்கள், புத்த மதத்தினர், ஜெய்னர்கள் உள்ளிட்டோர் புனிதமாக கருதி ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 160 உயரத்தில் மானசரோவர் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் இங்கு வருவதற்கு சீனா அனுமதி அளிக்கிறது. மானசரோவருக்கு சிக்கிம் மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து இந்தியா – சீனா எல்லையான நாது லா வழியாகவும், உத்தரகாண்டின் லிபுலேக்கின் வழியாகவும் செல்லலாம்.
400 பக்தர்கள்
கடந்த 2015-ல் இருந்து நாது லா வழி, புனித யாத்திரைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிக்கிமின் நாது லாவின் வழியே செல்வதற்கு 400 பக்தர்கள் அனுமதி கேட்டிருந்தனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிந்து குழுவுக்கு தலா 50 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். முதல் இரண்டு குழுக்களுக்கு சீன அரசு விசா வழங்கி விட்டது. இந்த நிலையில் புனித பயணம் மேற்கொண்ட முதல் குழுவினர் கடந்த 20-ந்தேதி சீன எல்லையான நாது லாவை கடந்திருக்க வேண்டும்.
திருப்பி அனுப்பிய சீனா
ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் சீன ராணுவத்தினர் திருப்பி அனுப்பினர். சாலை சரியில்லை என்று இதற்கு சீன தரப்பில் காரணம் கூறப்பட்டாலும், இந்திய ராணுவத்துடன் உடனான மோதல் போக்கே பக்தர்கள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ தளபதி ஆய்வு
இதையடுத்து, சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிற்கு பக்தர்கள் திரும்பினார்கள். அதே நேரத்தில் கேங்டாக்கில் இருந்த 2-வது குழுவினர், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இதற்கிடையே இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவுவதால் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று முன்தினம் சிக்கிமுக்கு வந்தார். அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராவத் திவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் சிக்கிமின் நாது லாவின் வழியே செல்லும் கைலாச மானசரோவர் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு நேற்று வெளியானது.