பெண் கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ. ஹெச்.டி.ரேவண்ணா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவரை கைது செய்யும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு குழு இறங்கியுள்ளது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இண்டர்போல் போலீஸ் உதவியும் நாடப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கண்ட பாலியல் புகாரை அளித்த பெண்ணை கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி.ரேவண்ணா மீது கடத்தப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்தார்.
ரேபரேலி உள்ளூர் சலூன் கடையில் தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தி!
அதன்படி, பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஹெச்.டி.ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 4ஆம் தேதியன்று ஹெச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்தனர். அவரை மே 14ஆம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஹெச்.டி.ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜாமீனுக்கான ஆவணங்கள் சிறைத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, சிறையில் இருந்து ஹெச்.டி.ரேவண்ணா இன்று விடுவிக்கப்பட்டார்.