
ஜன் தன் வங்கிக்கணக்குகளை பராமரிக்க ஆகும் செலவுக்கு பணம் தேவைப்படுவதால், மற்ற சேமிப்புகளில் சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கிறோம் என்று பாரத ஸ்டேட்வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அபராதம்
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி, குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தொகையை பராமரிக்காவிட்டால், ரூ.100, வரிகள் என அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு
இந்நிலையில், மும்பையில் நேற்று தேசிய மகளிர் தொழில்முனைவோர்கள் மாநாட்டில் ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாசார்யா கலந்து கொண்டார்.
பணம் தேவை
அப்போது, குறைந்த பட்ச இருப்பு தொகை அதிகரித்து இருப்பது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ வங்கிச்சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 11 கோடி ஜன்-தன் வங்கிக்கணக்குகளை தொடங்கி இருக்கிறோம்.
இந்த அளவுக்கு அதிகமான ஜன்-தன் கணக்குகளை பராமரிக்க எங்களுக்கு செலவு அதிகமாகும். அதற்கு பணம் தேவைப்படுகிறது.
செலவை சரிக்கட்ட
ஆதலால், சாதாரண சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களின் குறைந்தபட்ச இருப்பு அளவை அதிகரித்து, அதில் கிடைக்கும் அபராதத்தை வைத்து செலவை ஈடுகட்ட உள்ளோம். பல்வேறு விதமான காரணிகளை ஆய்வு செய்து, கவனமாகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்
தேவையில்லை
அதே சமயம், ஜன்-தன் வங்கிக்கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புதொகை பராமரிப்பது கட்டாயம்.
ஆனால், ஸ்டேட் வங்கியில்தான் குறைந்தபட்ச இருப்பு அளவு மிகவும் குறைவு. நாங்கள் அபராதம் விதிக்கும் திட்டத்தை 2012-ல் வாபஸ் பெற்றோம்.
கவலை வேண்டாம்
எங்களுடைய ஆய்வின்படி, எங்களின் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் பெரும்பாலான நபர்களின் கணக்கில் குறைந்த பட்ச இருப் புரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால், அபராதத்தை குறித்து கவலைப்படத் தேவையில்லை.
ஏ.டி.எம்.கட்டணம்
அதேபோல எங்கள் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.10 ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கிறோம்.
பணத்தை அச்சடிக்கவும், கொண்டுவரவும், எண்ணவும், பாதுகாப்பு அளிக்கவும் நாங்கள் செலவு செய்கிறோம். இதற்கான செலவை ஈடுகட்டவே நாங்கள் ஏ.டி.எம்.களை குறிப்பிட்ட அளவு பயன்படுத்தினால் கட்டணம் விதிக்கிறோம்.
4 முறைக்கு அதிகமா?
ஏ.டி.எம. செல்லாமல், வாடிக்கையாளர்கள் மொபைல்- பேமண்ட், இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யலாமே? ஒரு குடும்பத்தின் செலவுக்கு மாதத்துக்கு 4 முறைக்கு மேல் ஏ.டி.எம். சென்று பணம் எடுக்க வேண்டுமா?.
வர்த்தகம் செய்பவர்களுக்கு மட்டும்தான் அதிகமாக பணம் தேவைப்படும். அவர்களுக்கும்மொபைல் ஆப்ஸ், இ-பேமெண்ட் வந்துவிட்டது'' என்றார்.
மத்தியஅரசிடம் தகவலா?
அபாரம் விதிக்கும் முடிவை நிறுத்தி வைக்க மத்திய அரசு கூறியுள்ளதா? எனக் கேட்டதற்கு அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், “ அவ்வாறு மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான முறைப்படியான கடிதமும், தகவலும் வரவில்லை. அப்படி ஏதும் வந்தால் நிச்சயம் பரிசீலிப்போம்'' என்றார்.