
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் உள்ள வங்கிகளை ஏழைகள் நலனுக்கா நாட்டுடமை மட்டுமே ஆக்கினேன் என்றார். ஆனால், ஏழைகள் நலனுக்காக, வங்கிக்கணக்கு தொடங்க உதவினாரா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சோம்நாத் கோயில்
குஜராத் மாநிலம், சோம்நாத் நகர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள புகழ்பெற்றசோம்நாத் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, தரிசனம் செய்தார். அதன்பின் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் கேசுபாய்படேல், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
மின்சாரம் கிடைத்ததா?
நாட்டின் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி குறைந்த அளவே பணிகளைச் செய்து இருக்கிறது. ஒரு கிராமத்தில் மின் கம்பத்தை நடுவார்கள், மற்றொரு கிராமத்தில் மின் வயர்களை இறக்குவார்கள், டிரான்ஸ்மார்கள் பொருத்துவது குறித்து அதன்பின்தான் ஆலோசனை நடத்துவார்கள்.
முழுமையான திட்டம்
இதுபோன்ற முயற்சிகளால் கிராமங்களுக்கு மின்சாரம் முறையாக கிடைத்ததா? தேர்தல் பல வந்தனை, சென்றன. என்ன நடந்தது?. நாங்கள் வளர்ச்சிக்கான முழுமையான திட்டங்கள் தீட்டி இருக்கிறோம். அனைத்து பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்க வலியுறுத்தினோம்.
கழிப்பறை வசதி
பள்ளிகளில் கழிப்பறை இல்லாததால், ஏராளமான மாணவிகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினர். ஆனால், குஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது,பள்ளிகளில் கழிப்பறை கட்டும் திட்டத்தை இப்போது நாடுமுழுவதும் அமல்படுத்தினேன். மாணவிகள் படிப்பை கைவிடாமல் படித்து வருகிறார்கள். எங்களின் அனைத்து முயற்சிகளும் ஏழைமக்களின் முன்னேற்றத்துக்கானதாக இருந்து வருகிறது.
செய்தாரா இந்திரா?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஏழைகளுக்காக வங்கிகளை நாட்டுடமை ஆக்கினேன் என்று கூறினார். நான் கேட்கிறேன், அவரால் ஏழைகளுக்கு உதவ வங்கிக் கணக்கு தொடங்கி கொடுக்க முடிந்ததா?. ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகள் வந்ததா?. ஆனால், நாங்கள் வங்கிகளை கட்டாயப்படுத்தி, ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கிக்கணக்கு தொடங்க வலியுறுத்தினோம்.
பிளாஸ்டிக் கார்டு
வசதிபடைத்தவர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள்(பிளாஸ்டிக் கார்டு) மூலம் ஸ்வைப்செய்து செலவு செய்யும்போது, ஏழைமக்கள் அதை வியப்புடன் பார்த்தார்கள். ஆனால், இப்போது ஏழை மக்களுக்கும் டெபிட் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது 21 கோடி மக்களுக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.