
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், பெப்சிநிறுவனம், பானங்கள் தயாரிக்க, நிலத்தடி நீர் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநில சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபை கூடியதும், மார்க்சிஸ்ட்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரும், மாநில நிர்வாக சீரமைப்பு குழுவின் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், பேசுகையில், “ பாலக்காடு மாவட்டத்தில் பெப்சி நிறுவனம் நிலத்தடி நீர் எடுக்க கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்.
பாலக்காடு மாவட்டம், ஏற்கனவே இதுபோன்ற நிறுவனம் நிலத்தடி நீர் எடுத்ததால் உண்டான பிரச்சினைகளை சந்தித்துள்ளது, வறட்சியையும் எதிர்கொண்டுள்ளது.
ஆதலால், பெப்சி நிறுவனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். பெப்சி நிறுவனத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்'' என்றார்
இதற்கு பதில் அளித்து மாநில நீர் வளத்துறை அமைச்சர் மாத்யூ டி தாமஸ்கூறுகையில், “ பாலக்காடு மாவட்டம், புதுச்சேரியில் பெப்சி நிறுவனம் குளிர்பானங்கள் தயாரிப்புக்காக நிலத்தடி நீர் எடுத்து வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டுவருவதால், நிலத்தடி நீர் எடுக்க அந்த நிறுவனத்துக்கு பேரழிவு மேலான்மை சட்டத்தின் கீழ் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அந்த நிறுவனம் நீரை குறைவாகப் பயன்படுத்துவதற்கான அனைத்துநடவடிக்ைககளையும் அரசு எடுக்கும். இது தொடர்பாக கடந்த மாதம் 3-ந்தேதி அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் நீர் மட்டுமே எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
ஆனால், இப்போது பெப்சி நிறுவனம் நாள் ஒன்றுக்கு 6.5 லட்சம் லிட்டர் நீர் எடுத்து வருகிறது'' என்றார்.
பிளாச்சிமேடு சம்பவம்
பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பெருமாட்டி பஞ்சாயத்து, பிளாச்சிமேடுகிராமத்தில் கடந்த 1999ம் ஆண்டு கோக்க கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 5 லட்சத்துக்கு மேல் நீர் எடுக்க கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்தது, ஆனால், மாதங்கள் சென்றபின், கடும் வறட்சி ஏற்படத் தொடங்கியதையடுத்து, நிறுவனத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
மிகப் பெரிய அளவில் ஆண்டுக் கணக்கில் நடந்த போராட்டம், அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் இப்போது கோலா நிறுவனம் நீர் எடுத்துவருகிறது என்று குறிப்பிடத்தக்கது.