
ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் குறித்து மக்கள் தகவல் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறு ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பரிமாற்றம் செய்தால், அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரூ. 3 லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம் செய்ய தடை கொண்டு வரப்பட்டது. ஆனால், அதன்பின் நிதிச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு அந்த தொகை ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்கு அதிகமாக எந்த தனிநபரும் பரிமாற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அதே அளவு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரிச் சட்டம் 269 எஸ்.டியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதேசமயம், அரசு நிறுவனங்களில் பணம் செலுத்தவும், வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகள், கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்தவும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சட்டம் அமலுக்கு வந்து 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதை மீண்டும் மக்களுக்கு நினைவு படுத்தும் வகையில் வருமான வரித்துறை, அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்தால், அது குறித்து மக்கள் ‘blackmoneyinfo@incometax.gov.in’ என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் கொடுக்கலாம் என்று வருமான வரித்துறையினர் அறிவிப்புவௌியிட்டுள்ளனர்.