
கேரள எம்எல்ஏவை அசைவ பிரியராக மாற்றிய மோடி அரசு… 19 ஆண்டுகளுக்குப் பின் மாட்டுக்கறி சாப்பிட்டு போராட்டம்…
19 ஆண்டுகளாக சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வந்த கேரள காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம், கால்நடை விற்பனை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டார்.
பசு, ஒட்டகம் உள்ளிட்ட சில கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 19 ஆண்டுகளாக சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பல்ராம், கால்நடை விற்பனை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டார்.
கொச்சியில் நடைபெற்ற மாட்டிறைச்சி திருவிழாவில் கலந்து கொண்ட அவர், மாட்டிறைச்சி சாப்பிட்டத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்ராம் கடந்த 19 ஆண்டுகளாக சுத்த சைவமாக இருந்தேன். ஆனால், தற்போது உணவு அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை உணர்கிறேன் என தெரிவித்தார்.
பிராமணிய மற்றும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மோடி அரசு மக்களின் உரிமைகளை ஆக்கிரமிக்கிறது என பல்ராம் குற்றம்சாட்டினார்.