
கடந்த டிச.1ம் தேதி எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக, கேரள மாநில அரசின் சுகாதாரத் துறை சார்பில் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மூன்று இஸ்லாமியப் பெண்கள் தலையில் ஹிஜாப் அணிந்த நிலையில் சாலையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடினர். இதற்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட இந்தியா மட்டுமல்லாது, உலகின் சில இடங்களிலும் வெலிப்படிண்டே புஸ்தகம் படத்தில் வரும் ஜிமிக்கிக் கம்மல் பாடலுக்கு பரவலாக நடனமாடி மகிழ்கின்றனர் மக்கள். அந்தப் பாடலுக்கு விளம்பரத்துக்காக நடனம் ஆடிய ஷெரில் கடவன் இப்போது பிரபலமாகிவிட்டார்.
அந்த வகையில் இந்தப் பாடலையே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொண்டது சுகாதாரத் துறை.
மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட பாடலும் நடனமும் இப்போது மலப்புரத்தில் சோகத்தை பரப்பியுள்ளது.
மலப்புரத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல் மருத்துவம் பயிலும் மூன்று இஸ்லாமிய மாணவிகள், மலப்புரத்தில் உள்ள கோட்டக்குன்னு சந்திப்பு அருகே ஜிமிக்கி கம்மல் பாடலை ஒலிக்கச் செய்து சாலையில் நடனமாடினர்.
இந்தக் காட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது
இஸ்லாமிய உடையான தலையில் ஹிஜாப் அணிந்தபடி எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு நடனமாடிய மூன்று இஸ்லாமிய மாணவிகளின் செயல் ஏற்க முடியாதது என்று இஸ்லாமியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த இரு நாட்களில், மலப்புரத்தில் பல இடங்களில் இஸ்லாமியக் குழுக்கள் பொது மேடை போட்டு, கடுமையாக விமர்சனம் செய்தனர். நடனம் ஆடிய மாணவிகளின் இல்லத்துக்குச் சென்று, வீட்டில் உள்ளவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும் என்றும் மேடையில் கோபத்தை வெளிப்படுத்தினர் சிலர்.
இஸ்லாமியப் பெண்கள், பொதுமக்கள் கூடும் இடத்தில், தங்கள் கால்களை ஆட்டி பலர் முன்னிலையில் நடனம் ஆடியதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தனர் சிலர்.
இதை அடுத்து, மிக மோசமான வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் அந்தப் பெண்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து கருத்துகளை எழுதியுள்ளனர். இது குறித்த வீடியோ சில வலைத்தளங்களில் வெளியானது.
இப்படி, மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக் கொண்டு நடனமாடியது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது எனக்கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையாக அவதூறு விமர்சனம் எழுந்தது. அவர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்களை மிரட்டும் வகையிலும் மோசமாகவும் விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் இது குறித்துக் கூறுகையில், ''மூன்று பெண்களுக்கு எதிராக சமூக வலை தளங்களில் அவதூறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது கேரள கலாச்சாரத்திற்கு எதிரானது. இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.