
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘கேம் ஆப் அயோத்யா என்ற மற்றொரு திரைப்படடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் அலிகர் நகரை சேர்ந்த சுனில்சிங் என்ற அரசியல்வாதி இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
இவர் அஜீத்சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் உ.பி. மேலவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
தூண்டிவிடும் காட்சிகள்
தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் மறுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு திரைப்பட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதில் அயோத்தியின் பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்படுவது போலவும், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாபர் மசூதியை இடிப்பதற்கு கரசேவகர்களை தூண்டி விடுவது போலவும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இதற்கு எதிராக, ஏபிவிபி, இந்து ஜாக்ரன் மன்ச், இந்து மகா சபை ஆகிய அமைப்பினர் அலிகரில் உள்ள சுனில்சிங் வீடு முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏபிவிபி தலைவர் அமித் கோஸ்வாமி கூறும்போது, “பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர்களே பொறுப்பு என வரலாற்றை திரித்து, இந்துக்களின் மனம் புண்படும்படி படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான சுனில்சிங்கின் இரு கைகளை வெட்டுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசளிப்பேன்” என்றார்.
சஸ்பெண்ட்
இதையடுத்து அமித் கோஸ்வாமிக்கு விளக்கம் கேட்டு அதேநாளில் ஏபிவிபி நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவரை தங்கள் அமைப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்ட இந்து யுவ வாஹினி அமைப்பும் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் உ.பி. மாநிலச் செயலாளர் சஞ்சு பஜாஜ் கூறும்போது, “இப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது. மீறி வெளியிட்டால் அசம்பாவிதங்களுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு” என்றார்.
காதல் கதை
இது குறித்து சுனில்சிங் கூறும்போது, “எனது படத்துக்கு மீரட், முராதாபாத் பகுதி முஸ்லிம்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போது இந்து அமைப்புகளும் எதிர்க்கின்றன.
படத்தை வெளியிடும் முன் நான் அதை திரையிட்டு காட்டத் தயாராக உள்ளேன். ராமர் கோயிலுக்கான கரசேவையின்போது இந்து இளைஞன் - முஸ்லிம் பெண் இடையிலான காதலே படத்தின் கதை. படத்தை 8-ம் தேதி வெளியிட உள்ளேன்” என்றார்.